ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம்

🕔 April 27, 2017
– பிறவ்ஸ் –

மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – முசலி பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலின் போது குழப்பம் விளைவிக்கப்பட்டதாக அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நபவி, அந்த நிகழ்வினை  குழப்பிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நபவி பின்வரிசை ஆசனத்தில் தனது சகாக்களுடன் அமர்ந்திருந்தார். அவருடன் றியாஸ் சாலியும் உடனிருந்தார். தீடீரென அவர்கள் கூட்டத்தை குழப்பும் முற்சியை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். இருப்பினும் குறித்த கூட்டம் எவ்வித இடைஞ்சலுமின்றி தொடர்ந்தும் நடைபெற்றதாக, ஹக்கீமின் ஊடகப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் வில்பத்து தொடர்பில் தெளிவான விளக்கமொன்றினை வழங்கினர்.

வில்பத்து காடு உண்மையில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் குடியிருப்புள்ள வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் எவ்விதமான காடழிப்பும் நடைபெறவில்லை. இவை இரண்டையும் சம்பந்தப்படுத்தி, சிங்கள ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளன. வில்பத்து காடழிப்புக்கும் அப்பாவி மக்களின் குடியிருப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசால் காசிம், தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், கடற்படை அதிகாரிகள், வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அதிகாரிகள் மற்றும் முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்