யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவில் இழுபறி; அழுத்தங்கள் காரணம் என சந்தேகம்

🕔 April 22, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையிலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் முன்னிலை வகித்த முன்னாள் விஞ்ஞான பீட  பேராசிரியர்,   ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி இம்மாதம் 04ஆம் திகதி பல சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.

இந்த நிலையில்,  புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தைத் துணைவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சில ராஜதந்திர அழுத்தங்களின் காரணமாகவே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வில் கடும்   இழுபறி நிலை காணப்படுவதாகக் கூறப்படுகுிறது. மேலும், வணிக பீடாதிபதியாக தற்போது கடமையாற்றும் பேராசிரியரை புதிய உபவேந்தராக அறிவிக்குமாறு ஒருபுறம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தைத் துணைவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று வெள்ளிக்கிழமை மாலை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவுக்காக கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் மூவர் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் தெரிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘புதிய துணைவேந்தர் யார்?’ என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போதைய துணைவேந்தரை தொடர்ந்தும் கடமையாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை, பல்கலைக்கழக சமூகத்தினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், அதன் பின்னர்    ஓரிரு தினங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்