முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

🕔 April 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஒரு விடயம் மாத்திரம் தான். இன்னும் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்து வரும். முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க இந்தியா வழங்கிய பணம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளது.

இலங்கை சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக வெளிநாடுகள் பாரிய அளவில் பணம் வழங்கியுள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. மு.காவிற்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் செய்தியானது இவ்வாட்சியை கவிழ்க்க முஸ்லிம்களே பிரதான ஆயுதமாக பாவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்துகிறது.

சர்வதேசம் ஒரு ஆட்சியை கவிழ்க்க சிந்தித்தால் அவர்கள் தேர்தல் காலப்பகுதியில் மாத்திரம் முயற்சிக்க மாட்டார்கள். பல வருடங்கள் முன்பே பல திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறே எமது ஆட்சிக் காலத்தில் பல திட்டமிடப்பட்ட சதிகள் மூலம் எம்மிடமிருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டார்கள்.

சிலவேளை மு.கா.வுக்கு வழங்கப்பட்ட பணமானது தேர்தலுக்காக அல்லாமல் முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரித்த கொந்தராத்துக்காகவும் வழங்கப்பட்டிருக்கலாம். பணம் வழங்கி ஆட்சியை கவிழ்ப்பது நேர்மையான முறையல்ல. எமது ஆட்சியை குறுக்கு வழியிலேயே கவிழ்த்துள்ளனர். இந்தியாவின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய ஆட்சியின் பின்னால் செல்வது நல்லதல்ல.

இந்தியாவுக்கு வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனது தலைவலியை தீர்க்க வேண்டிய மிகப்பெரிய தேவை உள்ளது. எமது ஆட்சிக் காலத்திலேயே அவை பிரிக்கப்பட்டன. அவர்களின் கனவு எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என்பதெல்லாம் இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும். இன்று இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருப்பவர்களின் முஸ்லிம்களுடனான போக்குஇ அனைவரும் அறிந்ததே. அவர்களின் திட்டங்கள் எவ்வாறு இருக்குமென சற்று சிந்தனை செய்துகொள்ளுங்கள். அவர்களின் திட்டங்களுடனான ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டால் என்ன நடக்கும்?

எனது தந்தை எட்டு வருடங்களாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ள போதும் கடைசி இரண்டு வருடங்களிலே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் நாட்டில் தலைதூக்கியது. சம்பிக்க போன்றவர்களே அதனை ஆரம்பித்து வைத்தார்கள்.

அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அது தொடர்பில் நாம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன். நாம் இனவாத போக்குடையவர்கள் என்றால்இ ஏன் எமது ஆட்சிக்காலத்தின் முதல் எட்டு வருடத்தில் இனவாதத்தை வெளிக்காட்டவில்லை.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எவ்வாறு வெளிநாடுகளால் பணம் வழங்கப்பட்டதோ அது போன்றே சிறுபான்மையின முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்கவும் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கப்பட்ட சங்கதி எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக வெளியே வந்ததோஇ அது போன்று முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

இந்திய அரசு எமது ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கியதாக கூறப்படுகின்றமை சாதாரண விடயமல்ல. கடந்த தேர்தல் காலத்தின் போது எமது ஆட்சியை கவிழ்க்க இந்திய அரசு பணம் வழங்கியதா என்பதை இதன் பின்னால் ஒழிந்துள்ள பாரதூரங்களை அறிந்துஇ இந்திய தூதரகம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்