கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 March 14, 2017
– சப்னி அஹமட் –

“கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால்,  இரட்டை வேடம் போடும் எந்த தேவையும் எனக்கு இல்லை” என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்

‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு ஹரீஸ் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“அட்டாளைச்சேனை பிரதேச  சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹீர் போன்றோர் எனக்கு தூசிபோன்றவர்கள்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் பிழை  திருத்த கிளம்பியிருக்கும் அன்சில் மற்றும் தாஹீர் போன்றோர் யார்? இவர்களைப் பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் மாத்திரம்தான் நல்லவர்கள், ஏனையோர் மோசமானவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். அதனால், அவர்களுக்கு அவர்களின் பின்னணிகள் பற்றி சரியான பதில் வழங்க அம்பாறை மாவட்டத்தில் எந்த மூலையில் என்றாலும் பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து அங்கு பேசத்தயாராக இருக்கிறேன்.

நான் கட்சியில் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் எனக்கு இரட்டை வேடம் போடும் எந்த தேவையும் இல்லை. நான் இந்த கட்சியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சிக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். ஹஸன் அலியோ அல்லது மேடைகள் போட்டு புலம்பிக் கொண்டிருக்கும் ஏனையவர்களோ, இந்தக் கட்டியைத் துண்டாட நான் அனுமதிக்கப் போவதில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைகளை எதிர்பார்த்து பிரிந்து நிக்கின்றனர். அவர்கள் உண்மையினை புரிந்து கொள்வார்கள். அதற்கான காலம் வெகுதூரமில்லை. நான் அரசியலில் இருக்கும்வரை கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் உறுதியுடன் இருப்பேன்.

எதிர் தரப்பில் இருக்கும் எந்த அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுக்கும் நான் பயந்து ஒதுங்க மாட்டேன். நான் பயந்துபோய் ஒதுங்கி நிப்பவனல்ல. எங்கள் லட்சியங்களை மாசுபடுத்த, ஹஸன் அலியோ அன்சிலோ மற்ற யாருமோ குறுக்கிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். நான் அன்றுலிருந்து இன்றுவரை தலைமைக்கு விசுவாசமாக இருந்து கொண்டிருக்கிறேன். தலைமைக்கு எதிர்ப்புகள் வரும்போது நான் களத்தில் இறங்கி வீரத்துடன் செயல்படுபவன்.  தலைவருக்காக தொடர் போராட்டத்தில் இருந்துகொண்டிருப்பவனான என்னையும் சிலர் விமர்சித்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்