களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும்

🕔 January 28, 2017

Article - Azmy - 091– அஸ்மி அப்துல் கபூர் –

மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம்  2006

(நான் எழுதும் இந்த விடயங்களில் பொய்களைப் புகுத்தியிருந்தால், அல்லாஹ்விடம் நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்)

ல்கிஸ்ஸை கடற்கரை வீதி ஹசனலி சேரினுடைய இல்லம். 2006 ம் ஆண்டுகளில் ஒரு பொழுது.

கட்சியின் உயர்பீட உறுப்பினர் உவைஸ் அக்கரைப்பற்றிலிருந்து வரும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஹசனலி சேரை சந்திப்பார்.

ஒவ்வொரு முறையும் நானும் அவருடன் செல்வதுண்டு.

இயல்பாகவே நல்ல உபசரிக்கின்ற பண்புகளை கொண்ட மனிதர்தான் ஹசனலி சேர். அவரை விட ஒருபடி மேலானவர் அவருடைய மனைவி; மிகவும் அருமையான தாய்.

அன்று ஒரு பகல் வேளை ஹசனலி  சேரின் இல்லத்தில் நுழைந்தபோது, அவரை ஒரு போதும் அவ்வாறான கோப அடையாளங்களுடன் நான் கண்டதில்லை. கண்டபடி திட்டிக் கொண்டும் – தான் எதையோ இழந்துவிட்ட பரிதவிப்புடனும் இருந்தார்.

என்ன விடயம் என்று கேட்பதற்கு முன்னர், அவரே  கூறினார்; “கட்சியின் மரச்சின்னத்தில் இந்த தேர்தலில் கேட்க முடியாது தம்பி. ஏறாவூரை சேர்ந்த ஜமால்தீன் இசாக் என்பவன், ஹாபீஸின் தூண்டுதலின் பின்புலத்தில், கட்சிக்கு எதிராக வழக்கு போட்டு நிறுத்தி இருக்கிறான். இவ்வாறான ஒரு கேவலமான வேலையை, தலைவர் இருக்கும் போது – பிளவுபட்டவர்களோ, பின்னர் அதாஉல்லாவோ ஒரு போதும் செய்யவில்லை. இது முஸ்லிம் சமுகத்தின் சின்னம்” என்றவருடைய கண்கள் கலங்கியிருந்தமையைக் கண்டேன்.

கட்சியை எல்லோரும் நேசித்தார்கள். தலைமைகளை மாற்ற அல்லது கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவே பிளவுபட்டனர்.

ஆனால் இந்தக் கட்சியின் சின்னத்தை – அதன் வரலாற்றை, தலைவர் அஷ்ரப்பின் எண்ணங்களைக்  காவு கொள்ள நினைத்த வரலாற்று கறை; அதுதான்.

அந்த உள்ளூராட்சி தேர்தலில், பதிவு செய்யப்பட்ட கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தபோதிலும், கொழும்பில் வண்ணாத்திபூச்சியாகவும், ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறு சின்னம் வெவ்வேறு குழுக்களாகவும் பறந்து திரிந்து தேர்தலில் போட்டியிட்ட  அவலம் உருவானது.

அவ்வாறான நிலையில் அந்த சிக்கலை தீர்த்து கொள்வதற்காகதான், 2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் மு.கா.இணைந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இணைந்தும் கொண்டது.

அந்த தேர்தலில் கட்சியினுடைய போராளிகள் மற்றும் வேட்பாளர்களினுடைய மன உளைச்சல், அவர்களின் செலவீனம், அவர்களுடைய நியாயப்படுத்துகை என்பன எவ்வளவு கடினமான விடயங்களாக இருந்தன என்பதை அறிவோம்.

ஆனாலும், கட்சியின் சின்னத்தை இவ்வாறு களவாடியவருக்கு எதிராக, பின்னர் கட்சியினால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது, மர்மமான விடயமாகும்.

தற்போது, அந்த நபருக்கு -கட்சியில் அந்தஷ்து:  பிரதி தலைவர், அதிகாரம்: கிழக்கு முதலமைச்சர்.

இவையனைத்தும் எதற்காக  வழங்கப்பட்டன?

அவருடைய கரங்களுக்குள் இருந்த தாறுஸ்ஸலாம், இப்போது தலைவருடைய கைகளுக்கு மாற்றப்பட்டமைக்காகவே, மேற்படி அந்தஷ்தும் அதிகாரமும் வழங்கப்பட்டன என்றால், தாருஸ்ஸலாம் வெற்றுக்கட்டிடமா?

“கட்சி சின்னம் களவு போனதோ,கொத்தி திங்க கழுகு வந்ததோ” எனும் பாடல் கட்சிக் கூட்டங்களில் ஒலிக்கும் போது, ஒருமுறை உங்கள் தலைவர்களிடம், இது குறித்து கேட்டறிந்து கொள்ளுங்கள்.

இது யார் செய்த சதிக்காக உருவான பாடல்?

இன்று அவருக்கு கட்சி வழங்கியிருக்கும் அந்தஷ்து என்ன?

கேள்விகள் எழும்போதுதான் நிறைய புரிதல்கள் ஏற்படும்.

இன்னும் – வெற்று அதிகார மயக்கங்கள்,பண பரிமாற்றங்கள் உங்கள் கண்ணை மறைத்தால் விடுதலைஎன்பதை நாம் எவ்வாறு உணர முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்