மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன்

🕔 June 27, 2015

Segu - 001முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கூற்றானது, முழு முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக, மு.கா.வின் ஸ்தாபகத் தவிளாரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை நோகடிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ராஜித – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடமும், முஸ்லிம் சமுகத்திடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் சேகு இஸ்ஸதீன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரான  ராஜித சேனாரத்ன, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை கேலி செய்யும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ரஊப் ஹக்கீமுக்கு ஜனாதிபதி பதவி கிடைக்குமாக இருந்தால், அதற்காக அவர் தனது மதத்தினையும் மாற்றிக் கொள்வார் என்று கூறியிருந்தார்.

ராஜிதவின் இந்தப் பேச்சுத் தொடர்பில், தனது கண்டனத்தைத் தெரிவித்து – வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, மு.காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாளர் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

‘ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு, முஸ்லிம்கள் மீதான பொதுபலசேனாவின் வில்லம்புகளைவிடவும் விஷமத் தனமானவையாகும்.

முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைவரும், சிறந்த வணக்கவாளியுமான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் – ஜனாதிபதிப் பதவிக்காக தமது மதத்தையே மாற்றிக் கொள்ளவார் என்று, அமைச்சர் ராஜித வலிந்துரைத்திருப்பது மிகவும் அபத்தமானதும், ஆபாசமானதுமாகும். மேலும், முஸ்லிம்கள் தமது புனித இஸ்லாம் மதம் மீது வைத்திருக்கும் ஈடு இணையற்ற விசுவாசத்தை, எள்ளி நகையாடி – இளக்காரப்படுத்துவதாகவும் அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கள் உள்ளன.

ராஜித மீது – முஸ்லிம்கள் இதுகாலவரை வைத்திருந்த விசேட அபிமானத்தையும், கௌரவத்தையும் அவரின் வார்த்தைகள் – பொடி சூரணஞ் செய்து, துடைந்தெறிந்துள்ளதை அவருக்கு மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

காழ்ப்புணர்ச்சி காரணமாக, முஸ்லிம் மத கலாசார விசுவாசங்கள், விழுமியங்களை ஏப்பமிடப்பார்க்கும் வெறிபிடித்தலையும் – சிங்கள இனவாதக் கும்பல்களின், இதுகாலவரையிலான அத்துமீறல்கள், அக்கிரமங்கள், அடாவடித்தனங்கள் அத்தனைக்கும் மகுடம் சூட்டினாற்போல், இந்த நாட்டின் கண்ணிய மிக்க ஒரு பெரும் முஸ்லிம் தலைவரின் மத விசுவாசத்தை, பதவிக்கான ஒரு பண்ட மாற்றுப் பொருளாக மலினப்படுத்திக் காட்டி – அமைச்சர் ராஜித விடுத்திருக்கும் சொல்லம்பு, நல்லாட்சியின் கண்ணைக் குறிவைத்து ஏவிவிடப்பட்டுள்ள – ஒரு விஷம் தோய்ந்த வில்லம்பு என்பதை ராஜித அறிந்து கொள்ள – அதிக நாள் பிடிக்காது.

இறைவனால் அருளப்பட்ட மதமொன்றின் வழி நடப்பவராய் அமைச்சர் ராஜிதவுக்கு இருக்கக் கிடைத்திருக்குமானால், முஸ்லிம்களின் மத நம்பிக்கையைப் பற்றி அண்ணளவாகவேனும் அவரால் அறிய முடிந்திருக்கும்.

இந்த புனித நோன்பு காலத்தின் மகிமையைக் கூடக் கருத்திற்கொள்ளாது, முஸ்லிம்களின் தலைவர் ஒருவரின் மத நம்பிக்கையை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் அமைச்சரவைப் பேச்சாளரின் செயலானது, முழு முஸ்லிம்களையும் அவருக்கு எதிராகத் திருப்பிவிடப் போதுமானதாகும்.

எனவே, அமைச்சர் ரஊப் ஹக்கீமிடம் விசேடமாகவும், முழு முஸ்லிம் சமுகத்திடம் குறிப்பாகவும் பகிரங்கப் பொது மன்னிப்புகேட்டு, தம் பாவங்களை களுவிக் கொள்ளுமாறு அமைச்சர் ராஜிதவுக்கு ஆலோசனை வழங்குகிறேன்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்