இழப்பின் கதை

🕔 August 26, 2016

Article - MTM - 0983
– முகம்மது தம்பி மரைக்கார் –

ம்மைச் சுற்றி நமக்கான எல்லாம் இருந்தபோது, அவற்றின் பெருமைகளை நாம் நினைத்துப் பார்த்ததில்லை. அவற்றினையெல்லாம் நாம் இழந்து விட்ட பிறகுதான், எண்ணியெண்ணி ஏங்கத் தொடங்குகிறோம். நமது பொடுபோக்குகள்தான், இயற்கை நமக்களித்த செவ்வங்களை இல்லாமல் செய்து விட்டன. இருக்கும் போது நினைத்துப் பார்க்க மறப்பதும், இல்லாதபோது ஏங்கித் தவிப்பதும் மனித மனதின் பலவீனங்களாகும்.

முன்னொரு காலத்தில் நமக்கான உணவு, மருந்து என்று – எல்லாமே நம்மைச் சுற்றி இயற்கையாக இருந்தன. வேலியில் படர்ந்திருக்கும் தாவரம் தேவையான போது உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டன. இப்போது ஆசைக்குக் கூட, அவற்றினைக் காணக் கிடைப்பதில்லை.

முள் முருங்கைMul Murunkai - 011

முள் முழுங்கை என்று ஒரு மரம் உள்ளது. ஒரு காலத்தில் கிராமங்களில் வேலிக் கம்பாக நடுவார்கள். அப்படி நடப்பட்ட கம்பு, துளிர்த்து, வளர்ந்து – பின் பெருமரமாகி நிற்கும். முள் முருங்கை மரமெங்கும் சிறிய முட்கள் இருக்கும்.

எங்கள் வேலியில் முள் முருங்கை நின்றது. அதன் இலையின் சுண்டல் மிகவும் ருசியானது. வீட்டில் வாரத்துக்கு ஓரிரு தடவை முள் முருங்கைச் சுண்டல் கிடைத்த ஒரு காலம் இருந்தது. அப்போதெல்லாம், கறிக்குத் தட்டுப்பாடுகளில்லை. வேலியிலேயே மரக்கறிகளும், இலைக்கறிகளும் படர்ந்து நின்றன. கறிகள் அகப்படாதபோது, நமது தாய்மாருக்கும், தாய்மார்களின் தாய்மாருக்கும் – அட்சய மரமாக முள் முருங்கை நின்றது.

உணவாகியும் அதேவேளை, மருந்தாகவும் முள் முருங்கை பயன்பட்டது. பாட்டிகளின் வைத்தியத்தில் முள் முருங்கை இருந்தது. குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருந்தால், முள் முருங்கை இலையில் சாறு பிழிந்து, அதை குழந்தைகளுக்குப் பருக்க, இருந்த இடம்தெரியாமல் போகும் சளித்தொல்லை. சாறு பருக குழந்தைகள் பின்னடித்தால், அதனுள் கொஞ்சம் சீனி கலந்து பருகக் கொடுக்கும் பாட்டிமாரின் வைத்தியம் அற்புதமானது.

இந்த அபூர்வ மரம் இப்போது எங்கள் சூழலில் இல்லை. காலம் இதனைக் களவாடி விட்டது. அல்லது, தெரிந்து கொண்டே – இதனை நாம் களவுகொடுத்து விட்டோம். இப்போதுள்ள பிள்ளைகளுக்கு முள் முருங்கை பற்றித் தெரியாது. நமது வேலிகளெல்லாம் கற் சுவர்களாகத் தொடங்கியபோது, முள் முருங்கையும் நம்மிடமிருந்து விடைபெறத் தொடங்கிற்று. முள் முருங்கை இலைச் சுண்டல் ருசிக்காதவர்கள் அபாக்கியவான்கள்.

மொடக்கொத்தான்Mudakkotthan - 044

ஒரு காலத்தில் நமது வேலிகளை அழகுபடுத்திய தாவரங்களில் மொடக்கொத்தானும் ஒன்றாகும். முடக்கற்றான் என்றும் இதைச் சொல்வார்கள். முடக்கறுத்தான் என்பதுதான் இதன் சரியான சொல் என்று கூறப்படுகிறது.

‘சூலைப் பிடிப்பு சொறி சிரங்கு, வன்கரப்பான் காலைத் தொடு வலியுங் கண் மலமும் – சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு ‘முடக்கற்றான் தனை மொழி’ என்பது சித்தர் பாடலாகும். பிடிப்பு, கிரந்தி, கரப்பான், வாதம் மற்றும் மலக்கட்டு போன்ற நோய்கள், முடற்கற்றான் உபயோகித்தால், இந்த உலகை விட்டு ஓடி விடும்’ என்பது, இந்தப் பாடலின் பொருளாகும்.

இந்தச் சித்தர் பாடலெல்லாம் நமது மூதாதையர் அறிந்திருந்தார்களா இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், மொடக்கொத்தானின் அருமை – பெருமைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அப்போது நமது பாட்டிமாரின் அரிசிக் கஞ்சியில் மொடக்கொத்தான் இலை தாராளமாக மிதக்கும். அவர்களின் சாதாரண உணவாக மொடக்கொத்தான் இருந்தது. மொடக்கொத்தானின் மருத்துவ குணத்தை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

மொடக்கொத்தான் மரத்தில் ஒரு வகை பூச்சியினம் உலவும். சிவப்பு நிறத்தில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்ட அந்தப் பூச்சிகள் பார்ப்பதற்கு அழகானவை, ஆபத்தற்றவை.

சிறிய வயதில் அந்தப் பூச்சிகளைப் பிடித்து விளையாடிய ஞாபகங்கள், மொடக்கொத்தானை நினைக்கும் போதெல்லாம் வந்துபோகும். அந்தப் பூச்சிகளை ‘கோழி’ என்றுதான் குழந்தைகள் சொல்வார்கள். ‘கோழி பிடித்து விளையாடுதல்’ குழந்தை வயதில் குதூகலமான பொழுதுபோக்காகும். எங்கள் வேலிகளில் படர்ந்திருந்த மொடக்கொத்தான் கொடியில் உலவும் ‘கோழி’களைப் பிடித்து விளையாடிய நாட்கள், நேற்றைப் போல் உள்ளது. ஆனால், மொடக்கொத்தான் இப்போது எங்கள் சூழலில் இல்லை. அது, அருந்தாவரமாக மாறிவிட்டது. இலைக் கஞ்சி விற்கும் கடையொன்றுக்கு, அண்மையில் நண்பருடன் சென்றபோது, மொடக்கொத்தான் இலை கலந்த கஞ்சியினைப் பருகக் கிடைத்தது. அது பெரும் பாக்கியமாகும்.

குப்பைக் கீரைKuppai keerai - 055

ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாக குப்பைக் கீரை இருந்தது. குப்பை மேடுகளிலும், புல் – பூண்டுகள் முளைத்திருக்கும் இடங்களிலும் குப்பைக் கீரையும் வளர்ந்திருக்கும். அவ்வாறான இடங்களில் குப்பைக் கீரைகளைப் பிடிங்கியெடுப்பது கௌரவக் குறைச்சலாகக் கருதப்பட்டது. ஏழ்மையும், பசியும் – கௌரவம் பார்ப்பதில்லை. அவ்வாறானவர்கள் குப்பைக் கீரையைப் பிடுங்கிக் சென்று, சமைத்து உண்பார்கள்.

இரண்டொரு வருடங்களுக்கு முன்புவரை குப்பைக் கீரையின் மதிப்பு இப்படித்தான் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் சந்தைக்குச் சென்றிருந்தபோது திராய்க்கேணியிலிருந்து வந்து, காய்கறி மற்றும் மரக்கறி வகைகளை விற்கும் அண்ணனிடம் சென்றேன். நாட்டு மரக்கறிகளை அவரிடம் வாங்குவதில் ஒரு திருப்தி. கால் இயலாதவர், ஆனால் அதனை குறையாகக் கருதி உட்கார்ந்துவிடாமல், தொழில் செய்து வாழ்கிறார். மரக்கறித் தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, விளைபொருட்களைக் கொள்வனவு செய்து வந்து, சில்லறையாக விற்கிறார்.

மரக்கறிகளை அவரிடம் வாங்கிக்கொண்டிருந்தபோது, ‘குப்பைக் கீரையும் இருக்கிறது. நன்றாக இருக்கும், எடுத்துக்கொண்டு போங்கோ’ என்றார். ஆச்சரியத்துடன் பார்த்தேன். குப்பைக் கீரைக் கன்றுகளைக் கட்டுகளாக்கி வைத்திருந்தார். கொஞ்ச நேரம் அங்கு நின்றுகொண்டிருந்தபோது, சிலர் குப்பைக் கீரையினைக் கேட்டு வாங்கிச் சென்றார்கள். அவர்களில் எவரும் ஏழைகளில்லை.

குப்பைக் கீரையின் மருத்துவ குணத்துக்காகவே, இப்போது பலரும் அதனைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். குப்பைக்கீரை மலச்சிக்கலைப் போக்குகிறது, ஜீரண மண்டல உறுப்புகள் சிறப்பாகச் செயற்பட உதவுகிறது, கல்லீரல் மற்றும் மண்ணீரலை சிறப்பாகச் செயற்பட வைக்கிறது, மூளை மற்றும் இதயம் போன்ற உறுப்புகளுக்கு வலிமை தருகிறது என்று, குப்பைக் கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி இணையத்தில் தேடியபோது அறியக்கிடைத்து.

குப்பைக்கீரை – குப்பைகளில் மட்டுமல்ல, பெரும்பாலும் அது காணப்பட்ட எந்த இடத்திலும் தற்காலத்தில் கிடைப்பதில்லை. அது, இன்றைய நாட்களில் வியாபார நோக்குடன் பயிரிடப்படுகிறது.

குப்பைக்கீரை இப்போது பணக்காரர்களின் உணவாகிவிட்டது.

சீமைப் பொன்னாங்கண்ணிSeemai Ponnagkanni - 022

‘சீமியப் பொன்னாங்கண்ணி’ என்றுதான் அதனை வீடுகளில் சொல்வார்கள். சரியான பெயர் சீமைப் பொன்னாங்கண்ணி. வீட்டில், பூங்கன்றுகளுடன் சேர்த்து சீமைப் பொன்னாங்கண்ணியையும் வளர்ப்பார்கள். சாதாணமான பொன்னாங்கண்ணியின் தோற்றத்தில்தான் இதன் இலை, தண்டுகள் இருக்கும். ஆனால் – சிவப்பு நிறமாகக் காணப்படும். இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், வீட்டு முற்றத்தில் பூங்கன்றுகளுடன் இதையும் சேர்த்து வளத்ததால், சீமைப் பொன்னாங்கண்ணியினையும் ஒரு வகைப் பூங்கன்று என்றே – பலரும் எண்ணியதுண்டு.

ஆனாலும், பொன்னாங்கண்ணி போலவே சீமைப் பொன்னாங்கண்ணியும் உணவாகக் கொள்ளத்தக்கதாகும். பொன்னாங்கண்ணிச் சொதி போலவே, இதுவும் சுவையானது.

நமது சூழலில் உணவாகவும், மருந்தாகவும் காணப்பட்ட தாவரங்களில் சீமைப் பொன்னாங்கண்ணியும் ஒன்றாகும். ஆனால் இப்போது அது மருந்துக்கும் கிடைப்பது அரிதாகும்.

சீமைப் பொன்னாங்கண்ணி எதற்கெல்லாம் மருந்தாகிறது என்று தேடிப்பார்த்தோம். இரத்த வாந்தியை நிறுத்த இந்தத் தாவரம் மருந்தாகும். பால்வினை நோய்களுக்கு இதன் இலைத் தளிர்களுடன் இன்றும் சிலவற்றினையும் சேர்த்து மருந்தாகக் கொடுக்கப்படுகிறதாம்.

சீமைப் பொன்னாங்கண்ணி என்கிற, அந்த சிவப்பு நிறத் ‘தாவர அழகியை’ காணும் பாக்கியத்தை இப்போது, நமது கண்கள் பெரும்பாலும் இழந்தே விட்டன.

தேங்காய்பூ கீரைThenkaai poo keerai - 033

குப்பைக் கீரை போலவே, வீதியோரங்களிலும் புல் – பூண்டுகள் முளைத்திருக்கும் பாழ் வளவுகளிலும் ஒரு காலத்தில் முளைத்திருந்தது தேங்காய்பூ கீரை.

இந்தப் பெயர் அதற்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், அதன் பூக்கள் தேங்காயைத் துருவினால் வருகின்ற ‘தேங்காய்பூ’வைப் போலவே இருக்கும். அதனால், அதற்கு அப்படியொரு பெயர் வந்திருக்கவும் கூடும்.

நெல் விதையிலிருந்து நெற் பயிர் முளைப்பதைப்போல், ‘உபயோகித்து முடித்த தேங்காய்பூவை நிலத்தில் கொட்டும் போது, அதிலிருந்து முளைத்து வருவதுதான் தேங்காய்ப்பூ கீரைக் கன்றுகள்’ என, அறியாப்பருவத்தில் தீர்க்கமாக நம்பிக்கொண்டிருந்தேன்.

தேங்காய்பூக் கீரையை ஒரு காலத்தில் மிக அரிதாகவே உணவுக்குப் பயன்படுத்தினார்கள். அதுவும் ஏழைகளின் உணவாகத்தான் இருந்தது. தேங்காய்பூக் கீரையின் இலைச் சுண்டல் ருசியானது என்று, அதனைச் சுவைத்தவர்கள் சொல்வார்கள். ஆனால், எனது ஆயுளில் இதுவரை தேங்காய்ப்பூக் கீரையைச் சுவைத்ததில்லை.

கட்டுரையின் மேலே சொன்ன திராய்க்கேணி அண்ணன், தேங்காய்பூக் கீரைக்கட்டுகளையும் இப்போது விற்கின்றார். சந்தையில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தபோது நண்பரொருவர் தேங்காய்ப்பூக் கீரைக் கட்டு வாங்கிச் சென்றதைக் கண்டேன். சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு தேங்காய்பூக் கீரை மருந்தாகிறது என்று, அதனை வாங்கிக்கொண்டு சென்ற நண்பர் கூறினார். இணையத்தில் தேடிப்பார்த்தபோது, நாட்டு வைத்தியக் குறிப்புகள் அதனை உறுதி செய்தன.

தேங்காய்பூக் கீரை இப்போதெல்லாம் சந்தையில் எப்போதும் கிடைப்பதில்லை. அதனால், திராய்க்கேணி அண்ணனிடம் சிலர் சொல்லி வைத்து வாங்கிச் செல்கின்றார்கள். நமது கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்தபோது தேங்காய்பூக் கீரையின் பெருமை பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. அதை நம் சூழல் இழந்து விட்டபோது, தேடித் தவிக்கின்றோம்.

இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் அநேகமாக இல்லை என்பதைத்தான் – முள் முருங்கை, மொடக்கொத்தான், குப்பைக்கீரை, சீமைப்பொன்னாங்கண்ணி உள்ளிட்டவற்றின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

அறவே இழந்து விடுவதற்கு முன்னர், இவற்றினைக் கொஞ்சம் அனுபவித்துப் பார்ப்போம்.

நன்றி: தமிழ் மிரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்