நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம்

🕔 August 14, 2016

– றியாஸ் ஆதம் –Mobile service - 0456

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரை கச்சேரிக்கு முன்னால் அமைந்துள்ள உதவிப் பொது முகாமையாளர் (கிழக்கு) காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அம்பாறை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்குமுகமாகவே இந்நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும், முறைப்பாடுகள் தொடர்பாகவும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு, இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

குடிநீர் சம்மந்தமான பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அவைதொடர்பான எழுத்துமூல முறைப்பாடுகளை, பிரதேச நீர் வழங்கல் நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் நாளை திங்கட்கிழமைக்கு முன்னதாக கிடைக்குமாறு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது தொலைநகல் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வேண்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்