ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

🕔 July 21, 2016


Rishad - Article - 012
– றிசாத் ஏ காதர் –

ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம்.

இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத் துறைமுகம், மற்றையது மீன்பிடித்துறைமுகம். வர்த்தகத் துறைமுகமானது நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எந்தவித இயங்குதலுமின்றி உள்ளது. மீன்பிடி துறைமுகம் ஓரளவு செயற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இத் துறைமுக நிர்மாணத்தின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் பாரியளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுக நிர்மாணத்திற்கு முன்னர் இருந்த நில அமைப்பை இன்று கண்டுகொள்ள முடியாத அளவிற்கு நிலங்களை கடல் காவு கொண்டு விட்டது.

150 மீற்றருக்கும் அதிகளவான நிலப்பரப்பை கடல் தனதாக்கிக் கொண்டு விட்டது. ஒலுவில் பிரதேத்தில் கடற்றொழிலை நம்பி வாழ்பவர்கள் கணிசமாக உள்ளனர். இக்கடலரிப்பு காரணமாக இவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இன்னும் சிறிது காலத்தில் தாங்கள் முற்றாக கடற்தொழிலை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை காணப்படுவதாக பிரதேசத்து மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள மீனவர்கள், இக்கடலரிப்பினால் நான்காவது முறையாக தங்களது வாடிகளை பின்நகர்த்தியுள்ளதுடன், இனியும் பின்நகர்த்துவதற்கான சூழல் இங்கு இல்லை என்றும் கூறுகின்றனர். ‘எங்களை கடல் நகர்த்தி விட்டது. பலருடைய வாடிகள், குடிநீர்க்கிணறுகள் கடலுக்குள் மூழ்கியுள்ளன. தற்போது எமது தோணி, படகுகளை நிறுத்திவைப்பதற்குப் போதுமான நிலங்கள் கூட இல்லாம் போயுள்ளன. குறிப்பாக பதினைந்து அடி அகலத்துக்கும் குறைவான நிலப்பரப்பில் எமது தொழிலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடலரிப்பினால் தோணிகள், படகுகள் சேதமடையும் நிலை அதிகரித்துள்ளது’ என, மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பினால் இப்பிரதேச மக்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் தென்னந் தோட்டங்களை இழந்து தவிப்பதனை அவதானிக்கமுடிகின்றது. தென்னந் தோட்டங்கள் இம்மக்களின் வருமானத்துக்கான முக்கிய வழிகளில் ஒன்றாக கணப்பட்டது. இன்றைய சூழலில் இந்த வருமானத்தினையும் முற்றாக இழந்து நிற்கின்றனர்.

இவ்வருட ஆரம்பத்தில் இக்கடலரிப்பு உச்சமாக காணப்பட்டமையினால், வெளிச்ச வீட்டுப் பகுதியி பாரயளவில் சேதமடைந்தது. கடலரிப்பைத் தடுக்கும் நோக்குடன் கடலிலும், கரையிலும் பாரிய பாறாங் கற்கள் போடப்பட்டன. ஆயினும், இதனால் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கவில்லை. கடலரிப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது.

கடலை அண்டியுள்ள துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் சுற்றுலா விடுதி ஆகியனவும் தற்போது கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு அமைந்திருந்த பாரிய நீர்த்தாங்கி கடலரிப்பினால் உடைந்து வீழ்ந்துள்ளது.

இங்குள்ள மிக முக்கியமான பிரச்சினை மக்களின் வாழ்வியலுடனான போராட்டம்தான். கடலரிப்பினால் அழிவடையும் கட்டிடங்களை மீண்டும் எங்கேயாவது அமைத்து விடலாம். ஆனால், இப் பிரதேச மக்களின் கடற்தொழிலை அவர்கள் இங்குதான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ முறையாக நடவடிக்கைகள் எவற்றினையும் மேற்கொள்ளவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

‘இக்கடலரிப்பு பற்றி ஊடகங்களில் அதிகமாகப் பேசப்படும் சந்தர்ப்பங்களில் இங்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள், பின்னர் தலைமறைவாகி விடுகின்றனர் தேர்தல் வந்தால் மீண்டும் எட்டிப் பார்க்கின்றனர். இப்படித்தான் காலம் கழிகிறது’ என்று இப்பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி இக்கடலரிப்பினால் தங்களது நிலங்களை, தென்னந்தோப்புகளை இழந்த மக்களுக்கு இதுவரையில் முழுமையாக நஷ்டஈடுகளும் வழங்கப்பட்டவில்லை.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர்,அங்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்பு கிடைத்து விடும் என, இப்பிரதேச மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை நியாயமானதாகும். ஆனால், நிலங்களை, வாழ்வியலுக்கான வளங்களை இழந்து, துறைமுக நிர்மாணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய இம்மக்களின் அந்த நம்பிக்கையும் ஈடேறவிலலை. வர்த்தக துறைமுகத்தின் பயனற்ற நிலை, இம்மக்களின் தலையில் விழுந்த ஒரு பேரிடியாக உள்ளது.

ஆகவே, அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், இது விடயத்தில் விரைந்து செயற்பட்டு, ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒலுவில் கடலரிப்பினால் ஒரு பாரிய அனர்த்தம் நிகழ்வதற்கு முன்பாக அந்தத் தீர்வு கிடைக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் ஆறுதலாகச் செய்யும் வரை, கடல் காத்திருக்காது.

நன்றி: விடிவெள்ளி (20 ஜுலை 2016)Oluvil - 01 Oluvil - 02 Oluvil - 03 Oluvil - 04 Oluvil - 05 Oluvil - 06 Oluvil - 07 Oluvil - 08 Oluvil - 09

Comments

புதிது பேஸ்புக் பக்கம்