பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி
– எப். முபாரக் –
இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். லாஹிர் கேள்வியெழுப்பினார்.
கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை, சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பொதுபல சேனா அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்ற தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் முன்வைத்தார். இந்த நிலையில், மேற்படி பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையிலே சட்டத்தரணி லாஹிர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இந்த பொது பலசேனா அமைப்பு இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் தூற்றுகின்றனர். இலங்கையின் உயர்சபையான நாடாளுமன்றத்தினையும் தூற்றுகின்றார்கள். இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் இந்த அமைப்பு மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஏன் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது என எழுப்பினார்.
இந்நாட்டில் மூவின மக்களும் சந்தோசத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்கின்ற நிலையில் பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்களுடன் மீண்டும், மீண்டும் மோதிக்கொண்டே வருகின்றார்கள்.
இந்நாட்டில் ஆரம்ப காலம் தொட்டு சிங்கள மக்கள் பௌத்த மதத்தையும், தமிழ் மக்கள் இந்து மதத்தையும் வேறு சிலர் கிறிஸ்த்தவ மதத்தையும் பின்பற்றுகின்றார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகின்றார்கள். முஸ்லிம் மக்கள் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுவது இந்த ஞானசார தேரருக்கு பிடிக்கவில்லையா? தேரருக்கும் இஸ்லாம் மதத்தில் நம்பிக்கை இருந்தால் மஞ்சல் காவியை கழற்றி விட்டு வாருங்கள் எனவும் அறைகூவல் விடுத்தார்.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்வதற்கும் இந்த ஞானசார தேரரும் குழுவினருமே மூல காரணமாக இருந்தனர். இனங்களுக்கு இடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் செயல்பாடுகளை ஒரு போதும் நல்லாட்சிக்கான அரசாங்கம் மேற்கொள்ளாது. இனங்களையும் மதங்களையும் பொதுபலசேனா அமைப்பு துண்டாட எத்தனிக்கின்றது. அதற்கு ஒரு போதும் மக்கள் இடம்வழங்க மாட்டார்கள்.
பொது பலசேனா போன்று – இன்னும் பல பௌத்த கடும் மத கோட்பாடுகளை கொண்டுள்ள அமைப்புக்களுக்கும், அதற்கு தீனி போட்டு உரம் இட்டுக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் இந்த பிரேரனை ஒரு பாடமாக அமையும் என நம்புகின்றேன் என்றார்.