125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை

🕔 December 1, 2015
Bail concept.லங்கையில் அதிக தொகையான 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடிய இவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

சந்தேக நபர்கள் மூவரிடத்திலும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை கவனத்தில் கொண்ட நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர்,  சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதை எதிர்க்கவில்லை எனவும் கூறினர்.

இதன்படி குறித்த மூவரும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 50 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் சரீரப் பிணை வழங்கும் மூவரில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தவிட்டார்.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இவர்கள் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், குறித்த வழங்கு எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி மேற்படி சுங்க அதிகாரிகளான சுஜீவ பராகிரம ஜூனதாஸ, ஜகத் குணதிலக மற்றும் எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்