அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

🕔 October 7, 2018

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.

புத்தளம் – கொழும்பு முக திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு” எதிராக இடம்பெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“புத்தளம் மக்களின் நியாயமான இந்த போராட்டத்துக்கு எமது கட்சியும் தலைமையும் எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கி, புத்தளத்துக்கு குப்பைகள் கொண்டு வரப்படுவதை முழுமையாக எதிர்க்கும். ஏற்கனவே இந்த திட்டம் கருக்கூட்டியபோது அமைச்சரவையில் தனியே நின்று எதிர்த்துப் போராடியிருக்கின்றேன். அதே போன்று நாடாளுமன்றதிலும் எமது கட்சியும் நானும் எதிர்த்து குரல்கொடுத்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகியவற்றில் புத்தளம் மக்கள் நூறு சதவீதம் பங்களித்து இந்த ஆட்சியை கொண்டுவருவதில் உழைத்துள்ளனர், அதேபோன்று ஏனைய தேர்தலிலும் நாட்டின் அரச தலைவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு புத்தளம் மாவட்ட மக்கள் நிறையவே பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

புத்தளம் மக்களின் மனங்களையும் அபிலாசைகளையும் துளியளவும் கணக்கிலெடுக்காமல் சண்டித்தனமாக ஆட்சியாளர்கள் நடந்துகொள்ளக்கூடாது. அவர்களின் விருப்புக்கு மாறாக பலவந்தமாக குப்பைகளைக்கொட்ட எடுக்கும் முடிவுக்கு இந்த மக்களுடன் சேர்ந்து மக்கள் காங்கிரசும் பூரண எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.

பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாக புத்தளம் மக்களை எண்ணி, ‘போராட்டத்தில் நிற்பவர்களையும் ஆர்ப்பாட்டம் செய்வோரையும் சிறையில் அடைப்போம்’ என மார்தட்டி பேசுவதை நிறுத்தி, உங்கள் முடிவை மாற்றுங்கள்.

சமுதாயத்தின் விடிவுக்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் உங்கள் கால நேரங்களை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இந்த பயணத்தில் உங்களுடன் இணைந்து எமது கட்சி எல்லா வகையிலும் உதவும்” என்று, இங்கு அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

இங்கு வருகை தந்திருந்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறுகையில்;

“இந்த போராட்டத்தை நமது கட்சியும் தலைமையும் நூறு சதவீதம் சரிகண்டுள்ளது, நாடாளுமன்றத்திலே கடந்த காலத்தில் இருவர் மாத்திரமே இதற்கெதிராக குரல்கொடுத்துள்ளனர். கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீனும் முன்னாள் நாாளுமன்ற உறுப்பினர் நவவியுமே – புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக எதிர்த்து காரசாரமாக பேசியுள்ளனர்.

 இந்த மாவட்டத்திலே கழிவுகளை கொட்டி பிரச்சினைகளை பூதாகாரமாக்கும் விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு போதும் துணை நிற்காது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்