ஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி

🕔 May 1, 2018
– அஸ்லம் எஸ்.மௌலானா –

மிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் கேள்வியெழுப்பினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப்பை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது புதிய முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆனந்த சங்கரி, தனது கட்சிப் பிரதிநிதியான தமிழர் ஒருவரை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக தெரிவு செய்தமைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் தமிழ் – முஸ்லிம் நல்லுறவு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியும் முதல்வர் ஏ.எம்.றகீப்பும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதன்போதே கல்முனை முதல்வர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஹபாயா அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரஸ்தாபித்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஒரு காலத்தில் தமிழ் – முஸ்லிம் இன ஐக்கியத்துக்கு அச்சாணியாகத் திகழ்ந்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி போன்ற பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள், இது போன்ற விடயங்களில் நேர்மையுடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளானது நலிவடைந்த நிலையிலுள்ள தமிழ் – முஸ்லிம் உறவுக்கு மேலும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளும் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்றும் ஆனந்த சங்கரியிடம் முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார்.

இதற்கு தீர்வாக முஸ்லிம் ஆசிரியைகளை தமிழ் பாடசாலைகளுக்கோ தமிழ் ஆசிரியைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கோ நியமிப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ் – முஸ்லிம் உறவு இன்னும் தூர விலகிச் செல்லுமே தவிர பலமடைய மாட்டாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி; “தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைப்பதனை நோக்காக கொண்ட சில சக்திகளே இப்படியான சம்பவங்களை தூண்டி விடுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரு சமூகங்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இது தொடர்பில் தெரிவித்த கருத்து எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவரது கருத்து குறித்து நான் கவலையடைகிறேன். முஸ்லிம் ஆசிரியைகளும் சாரி அணிவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் கூறியிருப்பதானது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே இழுக்காகும். குறைந்தபட்சம் இப்பிரச்சினை தொடர்பில் இரு சமூகத்தினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கூறியிருக்க வேண்டும்” என்றும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் எம்.எம். நிசார், மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Comments