பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

🕔 December 11, 2017

– அஹமட் –

தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது.

சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினராக சபீஸ் பதவி வகித்தவர். மேற்படி இருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் நெருக்கத்துக்குரியவர்கள் என அறியப்படுகின்றனர்.

இந்த நிலையில், எதிர்வரும் அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் மேற்படி இருவரும் போட்டியிடும் முடிவோடு உள்ளனர் என, அந்தக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயர் பதவியைக் குறிவைத்தே களத்தில் இறங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக, பஹீஜ் மற்றும் சபீஸ் ஆகியோருக்கிடையில் புகைச்சலும், முரண்பாடுகளும் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

இன்னொருபுறம், இந்த இருவரில் எவரையும் இழப்பதற்கு அதஉல்லா தற்போதைக்குத் தயாராக இல்லை என்று, தே.காங்கிரசின் உட்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே, இருவரையும் அழைத்து – இரண்டு மூன்று மணி நேரம் அதாஉல்லா அண்மையில் பேசியதாகத் தெரிய வருகிறது.

இதன்போது இவர்களிடம் என்ன பேசப்பட்டது, எவ்வகையான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்கிற விபரங்களை முழுமையாக அறிய முடியவில்லை.

எவ்வாறாயினும், இருவரையும் சமரசப்படுத்தி தேர்தலில் களமிறக்குவதே, இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த அதாஉல்லாவின் நோக்கமாகும் என்று, அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்