உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு

🕔 June 25, 2017

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவில் அங்கம் வகித்த காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாகச் செயற்பட்டார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஜாதிக ஹெல உறுமயவின் கூட்டங்கள் மற்றும் கருந்துரையாடல்கள் பற்றிய விடயங்களை, அப்போதைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு கசியச் செய்தார்.

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த போது, கம்மன்பில ஓர் உளவாளியாக இருந்தார் என்று எமக்குத் தெரியும். ஏராளமான தருணங்களில் கட்சியின் கூட்ட அறிக்கைகள் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியை அழிப்பதற்கு கம்மன்பில முழுமையாக முயற்சி செய்தார்.

இதேவேளை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எமது கட்சி உறுப்பினர்களின் மனங்களை மாற்றும் நடவடிக்கையிலும் கம்மன்பில ஈடுபட்டார். மேலும், ஐ.ம.சு.முன்னணியிலிருந்து எமது கட்சி வெளியேற வேண்டுமெனவும் அவர் முயற்சித்தார்”  என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்