லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு

🕔 March 14, 2017

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளமையினை, உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் லண்டன் வாழ் – யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், யாழ்ப்பாண முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் உரிய வீதிகளுக்கு இட, நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இதன்போது அமைச்சரிடம் அவர்கள் வேண்டினர்.

லண்டன் ஹரோ பள்ளிவாசலில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்; அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலே இவ்வாறான தவறு நிகழ்ந்திருக்கலாம் எனவும், இது சம்பந்தமாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை, மீளக்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களின் இன்னோரன்ன தேவைகள் குறித்து அமைச்சரிடம் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் வளர்ச்சியில் மேலும் பங்களிப்புக்களை நல்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மௌலவி சுபியான் உட்பட யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் தனது  நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை நல்கி வருவதாக இதன்போது, அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட லண்டன் வாழ் முஸ்லிம்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்