ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம்

🕔 December 25, 2016

oluvil-ship-02– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

லுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பொருட்டு, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சயுறு எனும் கப்பல், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதோடு, அதன் பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றுவதில், சம்பந்தப்பட்ட கப்பல் மிகவும் மந்த கதியில் செயற்படுவதாகவும், பல நாட்கள் எதுவித செயற்பாடுகளுமின்றி கப்பல் வெறுமனே தரித்து நிற்பதாகவும் அங்குள்ள மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றுவதற்கு அரசாங்கம் நிதியொதுக்கியுள்ள நிலையில், அந்தப் பணி அவசரமாக நிறைவேற்றப்படாமையினால், தமது தொழிலை மேற்கொள்ள முடியாமல், தொடர்ந்தும் நஷ்டத்தினை எதிர்கொள்ளும் நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் படகுப் பாதையை மண் மூடியமை காரணமாக, துறைமுகத்தில் தரித்து நின்ற நூற்றுக் கணக்கான படகுகள், துறைமுகத்திலிருந்து வெளியேறி – கடலுக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இங்குள்ள மீனவர்கள் பல மாதங்களாக தொழிலின்றி அவதியுற்று வந்தனர். இது தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதனையடுத்து இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டதோடு, படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றுவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றுவதற்காக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு, 04 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் சயுறு எனும் கப்பல், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடலிலுள்ள மண்ணை அள்ளியெடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சயுறு கப்பல் 49.9 மீற்றர் நீளமும், 11.5 மீற்றர் உயரமும் கொண்டதாகும். இந்தக் கப்பல் 624 டொன் எடையுடையதாகும்.

சயுறு கப்பல் ஒரு தடவையில் 300 மீற்றர் கியுப் மண்ணை சுமந்து செல்லக் கூடியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பல நாட்களுக்கு முன்னர் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு வருகை தந்த சயுறு கப்பல், மண்ணை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும், அதன் நடவடிக்கையானது மிகவும் மந்த கதியில் உள்ளதாக அங்குள்ள மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்ததிலிருந்து ஒரு சில தடவை மட்டுமே, மண்ணை அள்ளியெடுத்துச் சென்று ஆழ்கடல் பகுதியில் கொட்டியுள்ளதாகவும், அதிகமான நாட்கள் வேலை செய்யாமல் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தமது படகுகளை துறைமுகத்துக்கு வெளியே கொண்டு செல்வதில் தொடர்ந்தும், தாம் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய காலநிலையில் அதிக மீன்கள் கடலில் கிடைக்கும் சாத்தியம் உள்ளபோதும், படகுப் பாதையிலுள்ள மண் அகற்றப்படாமையினால், தம்மால் தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும், மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாகவும், விரைவாகவும் அகற்றுவதே தற்போதைய அவசரத் தேவையாக உள்ள நிலையில், அதனை நிறைவேற்றுவதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று படகு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தமது பிரச்சினைக்குத் தீர்வினைக் காண்பதற்காக அரசாங்கம் நிதியினை ஒதுக்கியுள்ளபோதும், நடவடிக்கை மேற்கொள்கின்றவர்கள் மந்த கதியில் செயற்படுவதனாலேயே, தமக்கு தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக் காட்டுக்கின்றனர்.

எனவே, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அவசரமாக அகற்றுமாறு அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.oluvil-ship-04 oluvil-ship-03 oluvil-ship-07 oluvil-ship-08 oluvil-ship-01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்