கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம்

🕔 April 10, 2016

Ranil - 013கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீனாவுக்கு  குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்தின் தரத்துக்கு முன்னேற்றிக் கொண்டு செல்வதே தமது நோக்கமென்றும் அவர் கூறினார்.

சீன விஜயத்தை நிறைவுசெய்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் ரணில், சீன விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தமது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை நடத்தியிருந்தார். இதன்போதே மேற்குறித்த விடயத்தை அவர் கூறினார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீனாவுக்கு இலங்கையை தாரைவார்த்துக் கொடுப்பதாக அமையுமென விமர்சனங்கள் முன்வைக்கப்படு வரும் நிலையில், எக்காரணம் கொண்டும் அவ்வாறு இடம்பெற மாட்டாதெனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சீனா மற்றும் இலங்கை நாடுகளின் தலைவர்களுக்கிடைலான சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்வது அவசியமாகின்றது. எமது இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல், அதனை மையப்படுத்தியதாகவே அமைந்தது.

சட்டத்தின் படியே நடக்கிறது

நாட்டில் ஊழல் மோசடியை இல்லாமல் செய்து, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதாக வாக்குறுதியளித்தே நாம் ஆட்சிக்கு வந்தோம். அந்தவகையில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்பட்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரித்து, மத்திய தர வர்க்கத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது, கல்வியை மேம்படுத்துவது, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பனவே எமது முக்கிய குறிக்கோளாக உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பை அதிகரிப்பதாயின் நாம் உலக பொருளாதாரத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

உடன்படிக்கைகள் தொடரும்

அதற்கென இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை, சீனா மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, ஜப்பானுடன் பொருளாதார உடன்படிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜீ.எஸ்.பி. வரியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை என்பவற்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளோம்.

அத்தோடு, எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளோம். இவற்றின் மூலம் உலக வர்த்தக சந்தையுடன் எம்மால் போட்டியிட முடியும். கொழும்பு  துறைமுக நகரத் திட்டத்தில் முக்கியமாக, வியாபார கேந்திர நிலையத்தை உருவாக்கவுள்ளோம். இதனை நாம் கொழும்பின் வேறு எங்காவது உருவாக்கலாம். ஆனால், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில், குறுகிய காலத்தில் எவ்வாறு பயன்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதையே சிந்திக்கின்றோம்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சீனாவுடன் முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கென சீன பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.

நிரந்தரமில்லை – குத்தகைதான்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பொருளாதார மத்திய நிலையமாக உருவாக்கவுள்ளோம். இதற்கென சீனாவிடமிருந்து ஒருசதம் கூட கடனாக பெறப்போவதில்லை. கொழும்பு துறைமுக நகரத்தை யாருக்கும் நிரந்தரமாக வழங்கவில்லை. துறைமுக நகரத்தின்  நிலங்கள் 99 வருடகால குத்தகையின் அடிப்படையிலேயே வழங்கப்படும். இந்த போர்ட்சிட்டியில் எவரும் நிலங்களை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் குத்தகையின் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளமுடியும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் மத்தள விமான நிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் சீனா உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை, எவ்வாறு பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

மேலும் ஜீ7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, எதிர்வரும் ஜூலை மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் பயணமாகவுள்ளார். அம் மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடுதிரும்பிய பின்னர், அடுத்த மூன்று வருடங்களுக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும். நாம் யாருடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டாலும், அரசாங்கத்துக்கு வெளியில் மக்கள் இருக்க முடியாது. ஆகவே, மக்களின் தேவையறிந்து அதற்கேற்ற வகையில் அரசாங்கமும் நாடாளுமன்றமும் செயற்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்