அமைச்சர் றிஷாத்துக்கு ஆபத்துள்ளது: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபையிர் எச்சரிக்கிறார்

🕔 March 28, 2016

Subair - MPC - 01– அப்துல் ஹமீட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு – துரோகிகளுடன் அமைச்சர் ரிஷாட் கைகோர்த்துள்ளதாகவும், துரோகிகளினாலே அவருடைய அரசியல் பயணத்துக்கு ஆபத்து ஏற்படும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகயைில்;

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் மறைவின் பின்னர், அக்கட்சி வழிதவறிச் செல்வதாகக் கூறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கட்சி அமைத்தார். தற்போது அவரின் கட்சியை ஆரம்பிப்பதற்கும் அக்கட்சி வளர்ச்சிக்காக பல அர்ப்பணிப்புக்களைச் செய்தவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, துரோகிகளுடன் றிஷாட் கைகோர்த்துள்ளார். இந்த துரோகிகளினாலே அவருடைய அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரசை உருவாக்குவதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் நம்பிக்கையோடு உழைத்தவர் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட். அவருக்கு தேசியப் பட்டியல் வழங்கி நன்றி செலுத்துவேன் என சத்தியம் செய்து, றிஷாட் வாக்குறுதியளித்தார். ஆனால், இறுதியில் செயலாருக்கு துரோகமிழைத்துவிட்டு, அக்கட்சியில் இருந்து செயலாளரை ஓரங்கட்டிவிட்டார். குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்த புத்திஜீவியும் நேர்மையானவருமான வை.எல்.எஸ் ஹமீட்டை வெளியேற்றியதனூடாக, ரிஷாட் பதியுத்தீனுடைய தலைமைத்துவப் பண்புகளின் நம்பகத் தன்மைகள் கேள்விக்குறியாகிவிட்டன.

இச்சந்தர்ப்பத்திலேதான் செயலாளர் நாயகம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், திருட்டுத்தனமாக பேராளர் மாநாட்டைக் கூட்டி கட்சிக்காக உழைத்தவர்களை சட்டத்திற்கு முரனாக ஓரங்கட்டியதை எதிர்த்தும் நீதி வேண்டி நீதிமன்றம் சென்றார்.

அதே போன்றுதான் நானும் அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து கட்சியை நாடாலவிய ரீதியில் விஸ்தரிப்புச் செய்வதற்கும் பாடுபட்டவன். எனது செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சா ரிஷாட் பேசிய விடங்கள் ஆதாரங்களாக இன்னும் இருக்கின்றன. அப்படிப்பட்ட என்னை துரோகிகளின் கதைகளைக்கேட்டுக் கொண்டு, கட்சியைவிட்டு ஓரங்கட்டியிருப்பது அவருடைய தலைமைத்துவத்திலுள்ள பலவீனமே தவிர வேறொன்றுமில்லை. கட்சிக்காக அர்ப்பணிப்புகளைச் செய்த எங்களுக்கு துரோகமிழைத்த அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் பயணம், துரோகிகளினாலே அழிக்கப்படும் என்பதனை இந்த இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போது எமது நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கின்ற புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய எமது அரசியல் தலைமைகள், தமது கட்சி உட்பூசலில் சிக்கிக்கொண்டு இன்று நீதி மன்றங்களில் குந்திக்கொண்டிருப்பதனை பார்க்கும்போது மிகவும் கவலையாகவுள்ளது. இந்த அரசியல் தலைமைகள் எமது சமூகத்தினுடைய அரசியல் இருப்புபற்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்த வரலாறுகள் கிடையாது. அவர்கள் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு சம்பாதிக்கக்கூடிய அமைச்சுக்களைப் பெறுவதில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார்கள் .

குறிப்பாக அரசாங்கத்தோடு பங்காளியாக பெரும் அதிகாரங்களைப் பேரம்பேசிப் பெற்றுக்கொண்டு அமைச்சராக இருக்கின்ற ரிஷாட் பதியுத்தீன், வடபுல முஸ்லிம்கள் மீது அக்கறை செலுத்தி அவர்களுக்கு எந்தவொரு நிலையான தீர்வினையும் பெற்றுக்கொடுக்க முற்படவில்லை. காரணம் தனது சுயநல அரசியலை நிலையாக தக்கவைத்துக்கொள்வதற்காக, வடபுல முஸ்லிம்களின் பிரச்சிணைகள் அவருக்கு தேவையாக உள்ளன. வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையினை, அவருடைய அரசியல் இருப்புக்கான ஒரு பிரச்சாரமாக முன்னெடுப்பதனையும் வடபுல முஸ்லிம்கள் தெளிவாக புரிந்தகொள்ள வேண்டும்.

அமைச்சர் ரிஷாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு சமூக வலயதளங்களிலும், ஊடகங்களிலும் அவர் பந்தாடப்படுகின்ற அளவிற்கு அவரின் செயற்பாடுகள் மாறியிருக்கின்றது. கைத்தொழில் அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் செய்ததிலும் அமைச்சர் ரிஷாட்டின் மீது சந்தேகம்கொள்ளப்பட்டு, பல விமர்சனங்கள் வெளியானதையும் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது நாட்டிலே நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதற்கு பின்னர், எமது ஜனாதிபதி சீருடை வழங்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து அந்தப்பொறுப்பினை கல்வி அமைச்சரிடம் வழங்கினார். நாட்டின் மீது அக்கறை கொண்டு செயற்பட்ட கல்வி அமைச்சர், ஐயாயிரம் மில்லியன் ரூபாய்களை இலாபமீட்டி தனது நேர்மையான செயற்பாட்டினை வெளிப்படுத்திருப்பதனை நாம் மறந்துவிடமுடியாது. இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமது அரசியல் தலைமகள் சுயநலம் கொண்டவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்