தலைப்புச் செய்திகள்

அபராதம் செலுத்த முடியாத 1454 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு

நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால், நாடு முழுவதுமுள்ள சிறைகளில் மொத்தம் 1,454 தண்டனை பெற்ற கைதிகள் இன்னும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று – நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நானயக்கார இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன எழுப்பிய வாய்மொழி வினாவுக்குப் பதிலளிக்கும்போதே, நீதி அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின்படி, 421 கைதிகள் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் உள்ளனர். மேலும் 220 கைதிகள் 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

இது தவிர, 361 கைதிகள் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான அபராதத் தொகையையும், 245 கைதிகள் 50,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய் வரையிலான தொகையையும் செலுத்த முடியாமல் உள்ளனர். மேலும் 207 கைதிகள், 100,000 ரூபாய்க்கும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.

தற்போது நாட்டின் சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகள் 10,611 பேரும், விளக்கமறியலில் உள்ள கைதிகள் 28,408 பேரும் உள்ளனர் என்றும் நீதி அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஏதேனும் பொறிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நானயக்கார, சில கைதிகளின் அபராதத் தொகையை அவர்களுக்குப் பதிலாகச் செலுத்தி, அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

சட்டரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், தகுதியுடைய கைதிகளுக்காக அரசு அல்லது அரசு சாரா அமைப்புகள் – அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை விடுவிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.