தலைப்புச் செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமானது சிகை, பச்சை குத்தல் அடிப்படையில் கைது செய்ய அனுமதிக்குமா: நீதியமைச்சர் விளக்கம்

முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமானது, தனிநபர்களை அவர்களின் சிகை அலங்காரம், பச்சை குத்தல்கள் அல்லது ஆடைகளின் அடிப்படையில் கைது செய்ய அனுமதிக்கும் என்ற கூற்றுகளை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார நிராகரித்துள்ளார்.

மேலும், அந்தச் சட்டத்தில் ‘முடி’ என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய அமைச்சர்; சில குழுக்கள் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைப் பரப்பி வருவதாகவும், நீண்ட முடி அல்லது பச்சை குத்தியவர்கள், முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படலாம் என்ற தேவையற்ற அச்சத்தை பொதுமக்களிடையே உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

சட்டமூலத்தின் பிரிவு 4(2)(c)-ஐ விளக்கிய அமைச்சர்; அறியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் பொதுவாக தொடர்புடைய – தனித்துவமான கை சைகைகள், சின்னங்கள் மற்றும் பச்சை குத்தல்கள் ஆகியவை, ஒரு தனிநபர் அத்தகைய குழுவின் உறுப்பினரா என்பதைத் தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ளப்படலாம் என்று கூறினார்.

இருப்பினும், இந்த குணாதிசயங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கான மறுக்கக்கூடிய அனுமானத்தை மட்டுமே உருவாக்கும் என்றும், அவை மட்டுமே குற்றவியல் பொறுப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தில் பிரதிபலிக்கும் அனுகுமுறைகள் உட்பட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண்பதற்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனுகுமுறைகளின் அடிப்படையில், இந்த ஏற்பாடு அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட – முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், தனிநபர்களின் கருத்துச் சுதந்திரத்திலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ தலையிடாது என்று அவர் வலியுறுத்தினார்.

“உங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவது, பச்சை குத்திக்கொள்வது அல்லது நீங்கள் விரும்பும் சிகை அலங்காரத்தைக் கொண்டிருப்பது ஆகியவை அடிப்படை உரிமைகளே” என்று அமைச்சர் கூறினார்.

மேலும், முன்மொழியப்பட்ட சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்துக் கவலைகள் உள்ள எவரும், அவர் தவறான தகவல் என்று விவரித்ததைப் பரப்புவதற்குப் பதிலாக, அதை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பச்சை குத்துதல் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட உடல் தோற்றத்தை, தனிநபர்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களாக அடையாளம் காணப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகள் உட்பட, முன்மொழியப்பட்ட சட்டம் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இந்த மசோதா இன்று (20) நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்யப்பட்டது.