தலைப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பிரதேச சபை, ஆளுநரால் இடைநிறுத்தம்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையை மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி சுரங்க பெர்னாண்டோ, இடைநிறுத்தம் செய்துள்ளார். அத்துடன், அதன் நிர்வாக அதிகாரங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கான மாவட்ட உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

நேற்று (19) வெளியிடப்பட்ட அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தலின்படி, பிரதேச சபை மற்றும் அதன் தவிசாளருக்குரிய அதிகாரங்கள் மற்றும் பணிகள், கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் ஏ.டபிள்யூ.ஜி.எல். அத்தநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேச சபை, உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக – பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஆளுநர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, செப்டம்பர் 22 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி நிஹால் சுனில் ராஜபக்ஷவை – விசாரணை அதிகாரியாக ஆளுநர் நியமித்திருந்தார்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி – இந்த இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மொத்தம் 43 ஆசனங்களைக் கொண்ட இந்தச் சபையில், எதிர்க்கட்சிக் கூட்டணி 25 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 18 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகள் இணைந்து, சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றின. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான கிருஷாந்த ராஜநாயக்க தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், லஞ்சக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கிருஷாந்த ராஜநாயக்க தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தப் பதவி காலியானது. இதனைத் தொடர்ந்து, உப தலைவர் தற்காலிகமாக பதில் தவிசாளராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக – மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மூன்று முறை சபையைக் கூட்டிய போதிலும், போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் (’கோரம்) வருகை தராததால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதற்கிடையில், குறித்த சபை அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் பின்பற்றத் தவறியுள்ளதாகவும், பணியில் அலட்சியம் மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றைக் காட்டியுள்ளதாகவும் – மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமில அதபத்து ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இதன் விளைவாக, ஆளுநர் அந்தச் சபையை இடைநிறுத்தம் செய்து, அதன் நிர்வாகத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கான உதவி ஆணையாளரின் பொறுப்பில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.