இலங்கைத் தமிழர் அரசியலில், மங்கையர்க்கரசியின் வகிபாகம் மறக்க முடியாதது: அனுமதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

🕔 March 11, 2016

Hakeem - 085லங்கைத் தமிழர் அரசியலில் மறைந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் வகிபாகம் மறக்க முடியாதது என்றும்,தேசிய நல்லிணக்கத்துக்கும் அவர் இயன்றவரை பங்களிப்புச் செய்துள்ளார் என்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அண்ணன் அ. அமிர்தலிங்கம், எமது கட்சியின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபுடன் நெருங்கிய நட்புறவை பேணி வந்தது போலவே, அவரது துணைவியார் மங்கையர்க்கரசியும் எமது தலைவருடன் அன்பாகவும், பண்பாகவும் பழகினார்.

அந்தக் காலத்தில் அரசியலுக்கு புதிதான எங்களுக்கும் எமது தலைவர் அஷ்ரப் ஊடாக, அந்த இறுக்கமும் நெருக்கமும் அமிர்தலிங்கம் தம்பதியருடன் ஏற்பட்டது. அந்த உறவு இலங்கையிலும் லண்டனிலும் நீடித்தது.

லண்டனில் நடைபெற்ற மறைந்த அமர்தலிங்கம் ஐயாவின் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு, மங்கையர்க்கரசி  என்னை அழைத்திருந்தமையை, இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றியறிதலோடு நினைவு கூருகின்றேன்.

அவருடைய புதல்வர்களான டொக்டர் பகீரதனும்,காண்டீபனும் தொடர்ந்தும் என்னுடன் மனம் விட்டுப் பழகினார்கள்.

தமிழ்நாட்டுக்கு பயணம் செய்தவேளையில் (நேற்று வியாழக்கிழமை) விமானத்தில் இருந்தவாறே மங்கையர்க்கரசியின் மறைவுச் செய்தி கேட்டு கவலையடைந்து டொக்டர் பகீரதனுடன் தொடர்புகொண்டேன்.

1950களிலும், 1960 களிலும் அதன் பின்னரும் தமிழர் அகிம்சை போராட்டங்களில் மங்கையர்கரசி தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக 1977 ஆம் ஆண்டு,அண்ணன் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக ஆனபோது, அவருக்குப் பக்கபலமாக இருந்த மங்கையர்க்கரசியும் சர்வதேச ரீதியாக நன்கு அறியப்பட்டார்.

தமிழ் பேசும் மக்களின் கணிசமான பேராதரவு அண்ணன் அமிர்தலிங்கத்துக்கு இருந்தமை போலவே, துணைவி மங்கையர்க்கரசிக்கும் இருந்து வந்தது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அமிர்தலிங்கம் அலங்கரிக்கும் அரசியல் மேடைகளில், முறையாக இசை பயின்றிருந்த மங்கையர்க்கரசி அழகிய குரலில் பாடி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார். அவரை மேடையில் காண்பதற்கென்றே, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் இருந்தும், மக்கள் அரசியல் கூட்டங்களுக்கு வருகை தந்தமையை இன்னமும் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.

இந்தியாவிலும் வசித்த மங்கையர்க்கரசி, அண்ணன் அமிர்தலிங்கம் கொலையுண்ட பின்னர் லண்டனுக்குச் சென்று மகன்மாருடனும் பேரப்பிள்ளைகளுடனும் வசித்துவந்தார். நான் லண்டன் செல்லும் சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து அளவளாவுவது உண்டு.

இலங்கையின் தற்காலஅரசியல் நிலைமைபற்றியும், சிறுபான்மை மக்களின் அரசியல் விமோசனம் பற்றியும் அவர் மிகவும் அக்கறையோடு என்னிடம் கேட்டறிந்து கொள்வார்.

இந்திய அரசியல் தலைவர்களுடனும் மங்கையர்க்கரசி நல்லுறவைபேணிவந்தார்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்திருந்த அரசியல் கொள்கையை பின்பற்றுபவர்களுக்கும் தனிப்பட்டமுறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்