சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவுக்கு அக்கறை கிடையாது: மு.கா. தலைவர்

🕔 June 8, 2015

Hakeem - varipthan - 01– முன்ஸிப் –

னாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியினைப் பறித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான ஒரேயொரு வழி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது என, மு.காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இருக்கும் வரையில்தான் எதிர்த்தரப்பினர் இப்போது காட்டிக் கொண்டிருக்கும் வித்தையினைத் தொடர முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை – அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்ததேர்டு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் போதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ. நைசர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது;

“பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றினைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியிடமிருந்து பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க பறித்தெடுத்தமை போலானதொரு உணர்வினை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வந்துள்ளவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். எனவே, பிரதமர் பதவியை சுதந்திரக் கட்சி சார்ந்த எம்மிடம் தாருங்கள் என்பதுதான் – இவர்கள் வைக்கின்ற மறைமுகக் கோரிக்கையாகும்.

இதன்பொருட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களை கிராம மட்டங்களில் இவர்கள் தூண்டி விடுகின்றார்கள். நாளுக்கு நாள் கூட்டங்களை ஏற்பாடு செய்து, குழப்பி வருகிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்ரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மக்கள் ஆணையோடு சேர்த்து, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கும் மக்கள் ஆணை கிடைத்தது. ‘நான் ஜனாதிபதி ஆனவுடன், ரணில் விக்ரமசிங்கவை பிரதம மந்திரியாக்குவேன்’ என்று ஜனாதிபதி மைத்ரிபால பகிரங்கமாகக் கூறியிருந்தார். அந்த உறுதிமொழிக்கும் சேர்த்துத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.

எனவே, இந்த அடிப்படையில் தெரிவான பிரதமரை அகற்றுவதற்கு, தோற்றுப்போன கூட்டத்துக்கு எந்த அருகதையும் கிடையாது. இருந்த போதும், அவர்கள் இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையினை கொண்டுவரும் இவர்கள் – தம்மிடம் பெரும்பான்மை உள்ளதாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அது வழங்கிழந்துபோன பெரும்பான்மையாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி, மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்றுக்குழு, மு.காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டிணைந்து ஒரு வெற்றியினைப் பெற்றுள்ளோம்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட வெற்றியினைப் பறித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான ஒரேயொரு வழி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது. நாடாளுமன்றம் இருக்கும் வரையில்தான் இவர்கள் இப்போது காட்டிக் கொண்டிருக்கும் வித்தையினைத் தொடர முடியும்.

இந்த நாடாளுமன்றம் அதனுடைய பிரயோகத்தன்மையினை இழந்துவிட்டது. எனவே, இதைக் கலைத்துத்தான் ஆகவேண்டும். ஆயினும், 20 ஆவது திருத்தத் சட்டத்தினை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டுமென்கிற அழுத்தத்தினை, அவருக்கு ஆதரவாகயிருந்த சிவில் சமூக அமைப்புக்கள் கொடுப்பது போலானதொரு மாயையினை, ஜாதிக ஹெல உறுமய ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படுகின்ற விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையை நீக்க வேண்டும். தொகுதிக்கு பொறுப்புக் கூறுகின்ற ஒருவர் உறுப்பினராக வருகின்ற புதியதொரு திட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டும் என – மக்களுக்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவதற்கு மு.கா. ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், எமது சமூகத்துக்கான பங்கு சரியாகக் கிடைக்கக் கூடிய, புதியதொரு திட்டமாக அது இருக்க வேண்டும். தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை விடவும், புதிய தேர்தல் முறையானது நியாயமானதொன்றாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில், முன்வைக்கப்பட்டு வரும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் நாம் கேள்வியெழுப்புகின்றபோது, முன்வைக்கப்படுகின்ற பதில்கள் தொடர்பில் எம்மால் திருப்தியடைய முடியவில்லை. எனவே, உத்தேச தேர்தல் திருத்த சட்டம் தொடர்பில் சில திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால், அவற்றினை எடுத்த எடுப்பிலேயே ஜாதிக ஹெல உறுமயவினர் நிராகரிக்கின்றனர். ஏதோ, அவர்கள்தான் ஜனாதிபதி என்கிற மாதிரி நடந்து கொள்கின்றார்கள். ஆனால், எமது ஆட்சிக்குள் இவ்வாறானதொரு சர்வதிகாரம் நடப்பதற்கு இடம்கொடுக்க முடியாது.

இதனால்தான், எனக்கும் ஜாதிக ஹெல உறுமய தலைவருக்குமிடையில் கடந்த அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

புதிய தேர்தல் முறைமையானது, எல்லோரும் ஏற்றுக் கொள்கிற ஒரு தீர்வாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், எங்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒரு தேர்தல் முறையாக அது இருக்கக் கூடாது. இதனால்தான், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவில்லாமல் இருக்கிறது.

அடுத்த ஆட்சியானது, ஐ.தே.கட்சி தலைமையில் அமைந்து விடக் கூடாது என்பதில் எதிர் தரப்பு குறியாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவு பட்டுவிடக் கூடியதொரு அபாயமுள்ளது. இந்த அபாயத்தின் மத்தியில் நடக்கப் போகும் பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நினைக்கின்றார்கள்.

எனவே, தேர்தல் சட்டத்தினை தமக்கு விருப்பமானாற்போல் மாற்றி விடுவதனூடாக, ஐ.தே.கட்சியும், அந்தக் கட்சியோடு சேர்ந்துள்ள ஏனைய கட்சிகளையும் ஓரங்கட்டி விடலாமென்று, குறுகிய அரசியல் சிந்தனையோடு யோசிக்கின்றார்கள். எப்படியிருந்தாலும் ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும்.

இதற்குப் பிறகும் இந்த நாடாளுமன்றத்தைக் கொண்டு செல்வதென்பது, நாட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுத் தலைமைக்கும் நல்லதல்ல. எனவேதான் இந்த விஷயத்தில் எல்லோரும் ஒரு எதிர்பார்ப்போடு இருக்கின்றோம்” என்றார்.

இக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், மு.காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் சுகாதார ராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல். வாஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Hakeem - varipthan - 02Hakeem - varipthan - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்