
லங்கா சுகர் (பிரைவட்) லிமிடெட்டின் தலைவர் பதவியில் இருந்து சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார்.
அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு அனுப்பிய கடிதத்தில், நல்லாட்சி மற்றும் நிறுவன ஒருமைப்பாட்டிற்கு இசைவான முறையில் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாததால் தான் பதவி விலகுவதாக சந்தமாலி குறிப்பிட்டுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் – அரசுக்குச் சொந்தமான நிறுவனமான லங்கா சுகர் நிறுவனம், பொது நிறுவனங்கள் துறையால் விதிக்கப்பட்ட கடுமையான ஒழுங்குமுறை மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இத்தகைய கட்டமைப்புகள் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டாலும், நிறுவனம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதிலும், வெளிப்புற கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதிலும் அவை கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தனது பதவிக் காலத்தில், பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள், விதிமுறைகள் மற்றும் நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளை மீற வேண்டியிருக்கும் என்கிற – கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறுவனத்திற்குத் தெரிவித்த பல சந்தர்ப்பங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
“அத்தகைய சூழ்நிலைகளில், பணிப்பாளர்கள் குழு, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நான் – எங்கள் சட்டரீதியான மற்றும் நம்பிக்கைக்குரிய கடமைகளுக்கு உறுதியாகக் கட்டுப்பட்டிருந்தோம். எனவே அத்தகைய கோரிக்கைகளுக்கு இணங்க முடியவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைப்பாடு சில மாகாண அரசியல்வாதிகளுடன் அதிகரித்த மோதல்களுக்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் செயல்படும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளை தெளிவுபடுத்த பலமுறை முயற்சித்த போதிலும், அந்த விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம், விதிமுறைகள் மற்றும் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு முரணாக செயல்பட உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்து வரும் தொடர்ச்சியான அழுத்தம் தனது கடமைகளைச் செய்வதை மேலும் கடினமாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
“இந்த சூழ்நிலைகளில், நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காகவும், எனது தொழில்முறை நெறிமுறைகளுக்கு இணங்கவும் எனது கடமைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, இந்தப் பதவியில் இருந்து நான் விலகுவது பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கடிதத்தில் விவரித்துள்ளார்.


