
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்பே – அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டமைக்கான குற்றச்சாட்டுகள் அற்பமானவை கூறப்படுகிறது, அது உண்மைதான். இருப்பினும், 1977 இல் அவரின் அரசாங்கம் தேர்தலுக்குப் பிந்தைய பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதற்கு ரணிலும் ஜே.ஆரும் பொறுப்பாகவிருந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்களின் போது அமைச்சரவையில் ரணில் விக்ரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரின் அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பட்டலந்த சித்திரவதைக் கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
2015 ஆம் ஆண்டு நடந்த பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர், தற்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார். இங்குதான் விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமைகளை நேர்மையுடனும் தடையின்றியும் செய்ய முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.



