தலைப்புச் செய்திகள்

ரணில் மீதுள்ள குற்றச்சாட்டு, ஐரோப்பாவில் குற்றமில்லை: அவரை விடுவிக்குமா எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை

‘2022ஆம் ஆண்டு நாடு பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவடைந்தபோது இலங்கையைக் காப்பாற்றிய தலைவர் ரணில்’ என்று குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் நோர்வே சிறப்பு அமைதித் தூதர் எரிக் சோல்ஹெய்ம், ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில் இட்டுள்ள பதிவில், சோல்ஹெய்ம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

‘தயவுசெய்து ரனில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கவும். இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைகிறேன். தடுப்புக்காவலின் போது அவரது உடல்நலம் குறித்து நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம்’.

‘2022 இல் நாடு பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவின் அடிமட்டத்தை அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில்’.

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ள சோல்ஹெய்ம், ‘அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றம் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகவும் இருக்காது’.

‘ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்திற்கு நான் முழு ஆதரவையும் தருகிறேன், ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.