
இலங்கையில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், 63% பாடசாலை மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை எனவும் வைத்திய ஆலோசகர் சமூக மருத்துவர் டொக்டர் சிரந்திகா விதானகே தெரிவித்துள்ளார்.
தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 – 17 வயதுடைய பாடசாலை மாணவர்களில் 8.2% பேர் 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நேரத்தைக் கொண்டுள்ளனர் என்று, சுகாதார மேம்பாட்டு பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
இதேவேளை, மாணவர்களில் கடந்த 12 மாதங்களில் 6.6% பெண்களும் 16.4% ஆண்களும் கடுமையான மோட்டார் வாகனத்தால் ஏற்பட்ட விபத்துக் காயங்களால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வன்முறை மற்றும் தற்செயலான நிகழ்வுகளால் 23.8% பேர் உடல் ரீதியான தாக்குதல்களையும், 6.1% பேர் பாலியல் துன்புறுத்தலையும், 10.1% பேர் ‘டேட்டிங்’ வன்முறைகளையும், 6.9% பேர் இணைய பாலியல் துன்புறுத்தல்களையும் அனுபவித்துள்ளதோடு, 34.5% பேர் உடல் ரீதியான சண்டைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.
கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் வன்முறை மற்றும் தற்செயலான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 47.9% பேர் ஆசிரியர்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி புகாரளித்துள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 12 மாதங்களில் 6.1 வீதமான மாணவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளனர் என்றும், ஆண்களிடையே இது அதிக சதவீதம் பதிவாகியுள்ளது என்றும் சிரந்திகா விதானகே சுட்டிக்காட்டினார்.



