
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, தனது கல்வித் தகுதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். மேலும் அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.
பிபிசி சிங்கள செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சான்றிதழ்களை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர்; அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறினார்.
“சான்றிதழ்களை வழங்க நாடாளுமன்றத்தில் ஒரு முறைமை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை மலிவான தந்திரோபாயங்கள். நாங்கள் நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறோம்” என்று அவர் விவரித்தார்.
தன்னை கலாநிதி என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவருக்கு அவ்வாறானதொரு தகைமை இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தமையினை அடுத்து, சில மாதங்களுக்கு முன்பு – அவர் தனது சபாநாயகர் பதவிரை ராஜினாமா செய்தார்.
தனக்கு கலாநிதிப்பட்டம் கிடையாது எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர, ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தனது கலாநிதி பட்டத்தை சரிபார்க்க தேவையான சில ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
தன்னைப் பொறுத்த வரையில் – அரசியல் என்பது ஒருபோதும் பதவிகளைப் பெறுவது பற்றியது அல்ல என்று கூறிய அவர்; “எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வரும் எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் அதன் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம். அதுதான் எங்கள் அரசியல்” என்றார்.
மேலும், மக்களுக்காக தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பொதுமக்களிடையே சந்தேகங்கள் ஏற்படுவதைத் தடுக்கவே தான் பதவி விலகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் பாருங்கள்



