தலைப்புச் செய்திகள்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்: நிஸாம் காரியப்பர் வரவில்லை

நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது, மற்றும் மனோ கணேசன் ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் பைசர் முஸ்தபாவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் பட்டியலில் கையொப்பமிட்டனர்.

பத்தாவது நாடாமன்றத்தின் முதல் அமர்வு நொவம்பர் 21ஆம் திகதி இடம்டபெற்றது. இதன் போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் டிசம்பர் 12 ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. அவர்களில் மூன்று பேர் இன்று பதவியேற்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் – சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் – ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள போதும், அவர் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை.