
– பாறுக் ஷிஹான்-
கல்முனை மாநகர சபைக்கு எதிராக – மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை பகுதியில் புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று தோண்டப்படுகின்ற கொங்கிரீட் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாததால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றமை தொடர்பில் இலங்கை நீதிக்கான மய்யம் எனும் அமைப்பு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
”மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி – அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை எமது அமைப்பு அனுப்பி வைத்திருந்தது.
இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினரால் பொறுப்புணர்ச்சியற்ற கண்துடைப்பான பதில் எமக்கு வழங்கப்பட்டது. இதனை எமது அமைப்பு ஏற்றுக்கொள்ளாததால், இன்று மாநகர சபைக்கு எதிராக இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.
புதிய நீர் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள், கல்முனை மாநகர சபைக்கு அதற்காகத் தோண்டப்படும் வீதியினை செப்பனிடுவதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே, நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கல்முனை மாநகர சபை நிர்வாக எல்லைக்குள் – நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும், நூற்றுக்கணக்கான இடங்களில் தோண்டப்பட்ட வீதிகள் மாநகர சபையினால் செப்பனிடப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகின்றது.
இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்புகளாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட சேவையினை வழங்கவென நிதி அறவிடப்பட்டு, பின்னர் சேவையை வழங்காதிருப்பது நிதி மோசடியாகும். மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது” என, அந்த அமைப்பின் தலைவர் கூறினார்.
மாநகர சபை ஆணையாளருக்கு நீதிக்கான மய்யம் அனுப்பி வைத்த கடிதத்தில், தோண்டப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணியை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் – மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.



