பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முறைமையை தயார் செய்யுமாறு உத்தரவு

🕔 July 10, 2024

– முனீரா அபூபக்கர் –

மேல்மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அவசர முறைமையொன்றைத் தயார் செய்யுமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு நேற்று (09) உத்தரவிட்டார்.

இதுவரை மேல் மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 3000 பட்டதாரிகளுக்கு – ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை விடயங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக சுமார் 1900 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அந்த பட்டதாரிகளை இந்த வருடத்துக்குள் சேர்த்துக் கொள்ளுமாறும், எஞ்சியவர்களை அடுத்த வருடம் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நியமனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுடன் பத்தரமுல்ல, கொஸ்வத்தையில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த உத்தரவை வழங்கினார்.

உரிய நியமனங்களை வழங்கும் போது, தேவைப்பட்டால் சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளை மாற்றியமைப்பது நிர்வாகத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி அதற்குத் தேவையான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன் போது கூறினார்.

தற்போது கணிதம், விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கூறிய அமைச்சர், ஆசிரியர் நியமனங்களை வழங்கும்போது அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு உரிய பாடங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் வரை, மூன்று மாதங்கள் அல்லது 06 மாதங்கள் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயாபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, மாகாண பிரதம செயலாளர் தம்மிக்கா விஜேசிங்க, மேல்மாகாண கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மகேந்திர விஜேதுங்க, ஆளுநரின் செயலாளர் பீ. சோமசிறி மற்றும் மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்