இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை

🕔 June 1, 2024

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுகுறித்துப் பேசும்போது, “இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு – ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறும்.

இதனுடன் மனிதாபிமான உதவிகள் துரிதப்படுத்தப்படும். சில பிணைக் கைதிகளுக்கு மாற்றாக பலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்த முன்மொழிவை ‘நேர்மறையான’ கண்ணோட்டத்தில் பார்ப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “முழுமையான போர்நிறுத்தம், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியேறுவது மற்றும் பிணைக் கைதிகளுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை விடுவித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இருக்கும்,” என்று கூறினார்.

“இது உண்மையில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டிய தருணம். போர் நிறுத்தத்தை விரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது. ஹமாஸ் உண்மையில் அதை விரும்புகிறதா என்பதை நிரூபிக்க இந்த முன்மொழிவு ஒரு நல்ல வாய்ப்பு,” என்றும் அவர் கூறினார்.

”போர்நிறுத்தத்தின்போது ஒவ்வொரு நாளும் 600 டிரக் உதவிப் பொருட்கள் காஸாவிற்கு அனுப்பப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

”இரண்டாவது கட்டத்தில் எஞ்சியிருக்கும் அனைத்து பிணைக் கைதிகளையும் திருப்பி அனுப்ப முன்மொழியப்பட்டுள்ளது. இதில் ஆண் வீரர்களும் அடங்குவார்கள். இதற்குப் பிறகு இந்தப் போர்நிறுத்தம் ‘பகைமையின் நிரந்தர முடிவாக’ மாறும்,” எனவும் கூறியுள்ளார்.

பைடனுடன் கூடவே பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூனும் இந்த முன்மொழிவுக்கு சம்மதிக்குமாறு ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மோதலை நிறுத்தும் பொருட்டு – ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சரியான நடவடிக்கைகளை எடுக்க நாம் தயாராக இருந்தால், சண்டையில் ஒரு சிறிய இடைநிறுத்தம் நீடித்த அமைதியாக மாறும் என்று நாங்கள் நீண்ட காலமாகக் கூறி வருகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்றும் கெமரூன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் இந்த யோசனையை வரவேற்றுள்ளார். ‘உலகம், காஸாவில் அதிக துன்பங்களையும் அழிவையும் பார்த்துவிட்டது. அதை நிறுத்த வேண்டிய நேரம் இது’ என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிடுள்ளார்.

‘அமெரிக்க ஜனாதிபதி பைடனின் முன்முயற்சியை நான் வரவேற்கிறேன். போர் நிறுத்தம், பணயக் கைதிகளை விடுவித்தல், உத்தரவாதமான மனிதாபிமான உதவிகள் மற்றும் இறுதியில் மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை அடைய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எல்லா தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் சற்றுக் கடினமாக இருக்கக்கூடும் என்பதை பைடன் தனது உரையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனையை சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்த்தார். அதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்பு அளிப்பது பற்றிய பைடனின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

முந்தைய பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்ற பல தாவாக்கள் இந்த முன்மொழிவில் அடங்கியுள்ளன. பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் ஏற்கெனவே கூறியிருப்பதால், அந்த அமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதில் நிரந்தர போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் அழைப்பு முக்கியமானதாக இருக்கும்.

நிரந்தர போர் நிறுத்தம் என்பது ஹமாஸின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

மூன்றாவது கட்டத்தில் கடைசியாக மீதமுள்ள இஸ்ரேலிய பனயக் கைதிகள் திருப்பி அனுப்பப்படவேண்டும். கூடவே வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச உதவியுடன் ஒரு பெரிய புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இஸ்ரேலிய அரசில் உள்ள அதிகாரிகள் உட்பட சில இஸ்ரேலியர்கள் இந்த மூன்றுகட்ட முன்மொழிவை எதிர்ப்பார்கள் என்றும் பைடன் ஒப்புக்கொண்டார்.

எந்த வகையான அழுத்தம் வந்தாலும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு இஸ்ரேல் தலைமையிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய மக்களிடையே நேரடியாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்தத் தருணத்தை நழுவவிட முடியாது” என்று கூறினார்.

ஒக்டோபர் 7 போன்ற தாக்குதலை மீண்டும் நடத்தும் நிலையில் ஹமாஸ் இனி இல்லை என்றும் பைடன் கூறினார். இந்த அறிக்கை இஸ்ரேலியர்களுக்கு,’வோஷிங்டனின் பார்வையில் போரின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதற்கான’ சமிக்ஞையாகும்.

எல்லா பிணைக் கைதிகளையும் திரும்ப அளித்தல், ஹமாஸின் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை முடிவுக்குக் கொண்டு வருவது உட்படத் தனது இலக்குகளை அடையும் வரை போர் முடிவடையாது என்று – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியிருந்தார். மேலும் இந்தப் புதிய திட்டம் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

நிரந்தர போர் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், புனரமைப்பு மற்றும் கைதிகள் பரிமாற்றம் பற்றிப் பேசுவதால் இந்தத் திட்டத்தை நேர்மறையாக பார்ப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்