இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

🕔 March 28, 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனையை பிறப்பித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, ஞானசார தேரருக்கு 01 லட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் – ஞானசார தேரர் பேசினார் எனத் தொடரப்பட்ட வழக்கில் – அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபர் இரண்டு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – கூரகல பௌத்த விகாரை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாக தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கூரகல விகாரை தொடர்பில் – எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் – முஸ்லிம்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால், அதற்காக நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திடம் தான் மன்னிப்புக் கேட்பதாக அண்மையில் ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்