மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு
– க. கிஷாந்தன் –
டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாத நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக, அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்தது என்று, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் கூறினர்.
எனினும், பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால், போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
இந்த தீ விபத்தினால் அப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி கம்பத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.