அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது

🕔 February 5, 2024

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கான பரிபாலன சபை (நிர்வாக சபை) முறையாகத் தெரிவு செய்யப்பட்டு, அந்த சபையைப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் சட்டவிரோதமான வகையில் – வேறு ஒரு பரிபாலன சபையைத் தெரிவு செய்வதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கான பரிபாலன சபையிலிருந்து தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களின் தெரிவு, அந்தப் பள்ளிவாசலின் மரைக்காயர் சபை முன்னிலையில் இம்மாதம் 01ஆம் திகதி முறையாக நடந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு பதவிகளுக்குமானவர்கள் யார் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆயினும், பெரிய பள்ளிவாசல் தலைவர் பதவிக்கு தெரிவாக வேண்டும் என்கிற பெரும் ஆசையில் இருக்கும் ‘ஆசாமி’ ஒருவர் – அது நிறைவேறாத நிலையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட தெரிவுகளைக் குழப்புவதற்கு முயற்சித்து வருகிறார்.

மேற்படி ‘ஆசாமி’ – முக்கியமான அரச பதவிகளில் இருந்தபோது, ஒலுவிலில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மோசடியாக அபகரித்துக் கொண்டவர்களில் ஒருவராவார். மேலும் அட்டாளைச்சேனையில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபியை அடாத்தாக உடைத்து அகற்றி விட்டு, அந்த இடத்தில் ‘தூபி’ எனும் பெயரில் வேறொன்றை நிர்மாணிப்பதற்கும் மேற்படி ‘ஆசாமி’ காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஆசாமியே – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக வருவதற்கு பல்வேறு வழிகளிலும் தற்போது கடுமையாக முயற்சித்து வருகிறார்.

குறித்த ‘ஆசாமி’, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினராக உள்ளார், கடந்த முதலாம் திகதி – பரிபாலன சபை உறுப்பினர்களில் இருந்து – பள்ளிவாசலுக்கான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்ற போதும், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. காரணம், அவருக்கு தலைவராகும் ஆசை உள்ளபோதும், அந்தப் பதவிக்கு அவரைத் தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை ஆதரவு பரிபாலன சபையில் இருக்கவில்லை.

எது எவ்வாறு இருப்பினும் தற்போது முறையாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவை கருத்திற்கொள்ளாமல் – அதற்குப் புறம்பாக, வேறோரு பரிபாலன சபையை – பள்ளிவாசலின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சிலர் ஒன்று சேர்ந்து தெரிவு செய்ய முயற்சிப்பது சட்ட விரோத செயற்பாடாகும்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைக்கான (நம்பிக்கையாளர் சபை என்றும் அழைக்கப்படும்) உறுப்பினர்கள் – பாரம்பரிய ‘குடி’ வழி முறையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 26 குடிகள் உள்ளன. அவற்றில் 13 குடிகளிலிருந்து, ஒரு குடிக்கு ஒருவர் எனும் வகையில் பிரதிநிதிகளை தெரிவுசெய்து – பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு இந்தத் தடவை அனுப்புமாறு கூறப்பட்டது. அடுத்த முறை மற்றைய 13 குடிகளின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பரிபாலன சபைக்கு அனுப்பப்படுவர். இந்தத் தடவை பரிபாலன சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட குடிகளிலிருந்து – பள்ளிவாசலின் அடுத்த பரிபாலன சபைக்கு எவரும் உறுப்பினர்களாக வர முடியாது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையின் பதவிக் காலம் 03 ஆண்டுகளாகும்.

அந்த வகையில் இம்முறை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் பரிபாலன சபைக்கு உறுப்பினர்களாக 12 குடிகளின் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இம்முறை பரிபாலன சபைக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட 13 குடிகளில் – ஒரு குடியிலிருந்து பரிபாலன சபைக்கு உறுப்பினராக எவரும் அனுப்பப்படவில்லை.

உலவிப் போடி குடி, மூத்தநாச்சிக்குடி முதலாம் பாகம் (தென்பகுதி), வெள்ளரசங்குடி முதலாம் பாகம், வெள்ளரசங்குடி இரண்டாம் பாகம், வட்டுக்கத்தரக்குடி, கச்சனா குடி, ராசாம்பிள்ளை குடி வடபகுதி, உதுமான் போடி குடி, லெப்பைக்குடி இரண்டாம் பாகம், வெற்றி சிங்காரபவளாராச்சி குடி முதலாம் பாகம், லெப்பைக்குடி முதலாம் பாகம் மற்றும் மூத்தநாச்சிக்குடி முதலாம் பாகம் வடபகுதி – ஆகிய குடிகளில் இருந்தே, இம்முறை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் பரிபாலன சபைக்கு உறுப்பினர்களாக 12 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குடிகளில் இருந்து – பரிபாலன சபைக்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எந்தெந்தக் குடிகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்களின் தெரிவு சரியானது என்பதையும் குறிப்பிடும் ஆவணத்தில் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் மரைக்காயர் சபையினுடைய தலைவர் ஏ.பி.எம். அப்துல் காதர், செயலாளர் என். சம்சுதீன் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் முன்னைய பரிபாலன சபையினர் – தாங்கள் ராஜிநாமா செய்வதாகவும், பள்ளிவாசல் நிர்வாகத்தை மரைக்காயர் சபையிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்து எழுதிய கடிதமொன்றை, 19 ஜனவரி 2024 திகதியிட்டு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ளனர். அந்த ராஜிநாமா கடிதத்தில் முன்னைய பரிபாலன சபை உறுப்பினர்கள் 12 பேரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இதன் பின்னர்தான், புதிய பரிபாலன சபை உறுப்பினர்களிலிருந்து தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான நபர்கள், கடந்த முதலாம் திகதி தெரிவு செய்யப்பட்டனர்.

பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகள் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவலல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படுதல் வேண்டும். அந்தப் பதிவு ‘பரிபாலன சபை உறுப்பினர்கள்’ என்றுதான் குறிப்பிடப்படும்.

ஆனாலும், பள்ளிவாசல் நிருவாகத்தை இலகுவாக மேற்கொள்வதற்காக – ஒவ்வொரு பள்ளிவாசல்களினதும் பரிபாலன சபையினர் தங்களுக்குள் கலந்து பேசி – தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கென ஆட்களை தெரிவு செய்து கொள்வர். ஒன்றுக்கு மேற்பட்டோரின் பெயர்கள் – ஒரு பதவிக்கு பிரேரிக்கப்படும் போது, பரிபாலன சபையினரிடையியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிக வாக்குகளைப் பெறுபவர், குறித்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் கடந்த 01ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பரிபாலன சபை உறுப்பினர்கள் 12 பேருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அழைப்பு விடுக்கப்பட்ட 12 பேரிடமும் கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

ஆனால் அன்றைய கூட்டத்துக்கு வெள்ளரசங்குடி முதலாம் பாகம், லெப்பைக்குடி இரண்டாம் பாகம் மற்றும் மூத்தநாச்சிக்குடி இரண்டாம் பாகம் வடபகுதி – ஆகிய குடிகளில் இருந்து பரிபாலன சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேர் வருகை தரவில்லை. இதனால் மரைக்காயர் சபை முன்னிலையில் – கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பரிபாலன சபை உறுப்பினர்கள் 09 பேரும் இணைந்து – தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கானவர்களை தெரிவுசெய்தனர்.

இதனடிப்படையில் தலைவராக உலவிப் போடி குடியைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ், செயலாளராக லெப்பைக்குடி இரண்டாம் பாகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் மற்றும் பொருளாளராக வட்டுக்கத்தரக் குடியைச் சேர்ந்த எம்.ஐ. ரமீஸ் ஆகியோர் முறையாகவும் ஏக மனதாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தத் தெரிவானது சரியாகவும் முறையாகவும் நடந்தமையை மரைக்காயர் சபையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான், ‘புதிய பரிபாலன சபை மற்றும் அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலைவர் உள்ளிட்ட பதவிகள் செல்லுபடி ஆகாது’ எனத் தெரிவிக்கும் சிலர், தமக்கு விருப்பமானவர்களைக் கொண்டு – புதிய பரிபாலன சபையொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

இதற்கிணங்க நேற்று (04) இரவு இஷா தொழுகையின் பின்னர் கூடிய அவர்கள், தங்களுக்கு வாசியான ஒரு பரிபாலன சபையை அமைப்பதற்கும், அந்தப் பரிபாலன சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அந்த பரிபாலன சபைக்கு மேற்கூறப்பட்ட ‘காணி மோசடி ஆசாமி’யை தலைவராகக் கொண்டு வருவதே அவர்களின் நப்பாசையாகும்.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு அங்கு சென்ற மற்றொரு தரப்பார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக முடிவடைந்திருக்கிறது.

இந்த நிலைவரம் குறித்து அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைத் தலைவர் ஏ.பி.எம். அப்துல் காதரிடம் வினவியபோது; “தற்போது புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.எல்.எம். ஹனீஸ் தலைமையிலான பரிபாலன சபையே சட்டபூர்வமானதாகும்” எனத் தெரிவித்தார்.

”அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் பரிபாலன சபைக்கு உறுப்பினர்களை – ‘குடி’ வழி ரீதியாகத் தெரிவு செய்வதே பாரம்பரியமாகும். மிக நீண்ட காலமாக அந்த வகையில்தான் பரிபாலன சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்தத் தடவையும் அவ்வாறுதான் நடந்துள்ளது.

அந்தப் பாரம்பரியத்துக்கு மாறாகவும், தற்போதுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாகவும பரிபாலன சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டுமென்கிற முன்மொழிவுகள் இருந்தால், அதனை தற்போதைய பரிபாலன சபைக்கு சமர்ப்பித்து, அந்த சபையின் அங்கிகாரத்தைப் பெற வேண்டும். அப்படிப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே தற்போதுள்ள நடைமுறையை மாற்ற முடியும். அதை விடுத்து – நினைத்தவர்களெல்லாம் நினைத்த மாதிரி மாற்றங்களை உருவாக்க முடியாது.

பள்ளிவாசல் என்பது பொது நிறுவனமாகும். அதன் நிர்வாக முறைமையில் மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால், அதனை சட்ட ரீதியாகவே செய்ய வேண்டும். போவோர் வருவோரெல்லாம் நானும் நிர்வாகத்தினுள் வர வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் மரைக்காயர் சபைத் தலைவர் காதர் கூறினார்.

எனவே, முறையாகவும் சரியாகவும் தெரிவு செய்யப்பட்ட – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் பரிபாலன சபைக்கும், அதன் தலைவர் உள்ளிட்ட தெரிவுளுக்கும் எதிராக செயற்படுகின்றமையானது சட்ட விரோதமாகும். தத்தமது விருப்பு, வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக – ஊரின் சிறப்பான பாரம்பரியத்தையும் தீர்மானங்களையும் மீறிச் செயற்பட முயற்சிப்பது தவறான நடவடிக்கையாகும். எனவே, பிழையான இந்த செயற்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் வெளிப்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் – மேற்படி நபர்களே பொறுப்புக்கூற வேண்டும்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு தொடர்பில் சிலர் நடந்து கொள்ளும் விதமானது எவ்வாறுள்ளது என்றால்; சின்னக் குழந்தைகள் விளையாடும் போது, அவர்கள் நினைப்பது போன்ற முடிவுகள் – அந்த விளையாட்டில் கிடைக்காமல் போனால், அந்த விளையாட்டு ‘சரியில்லை’ எனக் கூறி, ”சோலி பிரட்டி” திரும்பவும் அந்த விளையாட்டை ஆரம்பத்திலிருந்து ஆட அழைப்பது போல் உள்ளது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ்

தொடர்பா செய்தி: அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்