சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

🕔 January 4, 2024

– முனீரா அபூபக்கர் –

சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2019 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த வருடத்தில் அந்தத் திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில், அடையாளம் காணப்பட்ட இடங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி – இதன் கீழ் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். திட்டத்தின் மொத்த செலவு 1045 மில்லியன் ரூபாவாகும். 320 மில்லியன் ரூபா இந்த வருடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தொல்பொருள் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வருமானம் ஈட்டுதல் என்பதோடு சூழல் முகாமைத்துவம் போன்றவை, இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பிரதான இலங்குகளாகும்.

சிகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை நகரங்களில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு உரிய பங்குதாரர்களான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்கனவே இது சம்பந்தமான திட்டங்கள் தயார்படுத்தப்பட்டிருக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்