பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம்

🕔 November 22, 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் தான் ஏன் கலந்துகொண்டு வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாததாலும், வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை அடி மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாலும் தான் வாக்களிப்பதில் இருந்து விலகியதாக கூறினார்.

வரவு – செலவுத் திட்டத்தில் நல்ல மற்றும் கெட்ட முன்மொழிவுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்றார்.

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஏற்கனவே முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்,ஷ அவ்வாறு செய்ய நினைக்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.

Comments