திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

🕔 November 16, 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 06 கிலோ குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியை கொண்டு செல்லமுற்பட்ட போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொதி கனடாவில் இருந்து அனுப்பப்பட்டது.

சந்தேக நபர் இன்று ஒருகொடவத்தை சுங்க பரிசோதனை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை சுங்கப் பிரிவினரால் சுமார் 50 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களில் குஷ் மற்றும் ஹஷிஸ் போன்ற போதைப் பொருட்களும் உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

அண்மையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றினுள் கண்டெடுக்கப்பட்ட குஷ் போதைப் பொருளை பார்வையிடுவதற்காக ராஜாங்க அமைச்சர் ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை சுங்க களஞ்சியசாலைக்கு இன்று விஜயம் செய்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கனடாவில் இருந்து வந்திருந்த கொள்கலனை, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 06 கிலோ குஷ் போதைப்பொருள் சிக்கியது.

முன்னர், இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 35 கிலோ ஹஷிஷ் மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10.5 கிலோ குஷ் ஆகியவற்றை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்