காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு

🕔 November 6, 2023

காஸாவில் நடந்து வரும் தாக்குதல்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பணி நிறுவனத்தின் ( UNRWA) ஊழியர்கள் 88 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்,

இது – ஒரு மோதலில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் இறப்புகளில் அதிகமானது என, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.நா விடுத்துள்ள கூட்டறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இந்த உயிரிழப்புகளுக்கு கண்டமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழுள்ள 18 நிறுவனங்களின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அந்தக் கூட்டறிக்கையில்; இஸ்ரேல் – காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மோதலில் இறப்பு எண்ணிக்கை ‘அதிர்ச்சியையும் திகிலையும்’ ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

“எங்களுக்கு உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. 30 நாட்கள் ஆகிவிட்டன. போதும், இது போதும்” என, அவர்கள் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் காஸாவுக்குள் உதவிகளை அனுமதிப்பது உட்பட – அனைத்து தரப்பினரும் “சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளை” மதிக்குமாறும் அந்த அறிக்கையில் ஐ.நா தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காஸா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மறுக்கப்படுவதுடன், “அவர்களின் வீடுகள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுவீசித் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்