காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது

🕔 October 29, 2023
காஸா நகரின் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு, கட்டட இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் தேடுகின்றனர்

காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி வருவதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இது இவ்வாறிருக்க வடக்கு காஸாவில் உள்ள மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் இன்று (29) மற்றொரு வீடியோவை வெளியிட்டது.

வெளியேறுமாறு மீண்டும் உத்தரவு

இது இஸ்ரேல் அடிக்கடி மேற்கொள்ளும் ஒரு நடைமுறையாகும். இந்த காணொளியில் இஸ்ரேல் ராணுவ பேச்சாளர் – வடக்கு காஸாவை ஹமாஸின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பொதுமக்களை குறிவைக்காமல், குறிப்பாக ஹமாஸை குறிவைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை, தெற்கிலும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறமாக இஸ்ரேலிய குடியேற்றங்கள் சரமாரியாக ராக்கெட்டுகளால் தாக்கப்பட்ட காட்சிகளைக் காட்டும் மற்றொரு வீடியோவை ஹமாஸின் ராணுவ பிரிவான கஸ்ஸாம் படையணி பகிர்ந்துள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தைக் குறிப்பிடாமல், தங்களின் டெலிகிராம் மெசேஜிங் செயலியில் குறித்த வீடியோவை கஸ்ஸாம் படையணி பகிர்ந்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் தாக்குதலில் 7,700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் கொல்லப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான முயற்சிகள் விரிவடையும் இஸ்ரேல்

இது இவ்வாறிருக்க தெற்கு காஸாவில் “மனிதாபிமான முயற்சிகள்” ஞாயிற்றுக்கிழமை விரிவடையும் என்று இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார். ஆனால் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஒக்டோபர் 07 அன்று போர் தொடங்கியதில் இருந்து, எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்லைக் கடவை வழியாக 87 ‘ட்ரக்’கள் – காஸா பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டன.

குறித்த வாகனங்களில் தண்ணீர், உணவு மற்றும் மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டன. காஸாவுக்குள் எரிபொருளை அனுமதிப்பது குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை, இதனால் அங்கு உயிர்காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்