பாதுகாப்புச் செயலாளரும் ராணுவத் தளபதியும் தன்னை அச்சுறுத்தியதாக மொட்டுக் கட்சி எம்.பி நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

🕔 October 6, 2023

பாதுகாப்புச் செயலாளரும் ராணுவத் தளபதியும் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில், தன்னை அச்சுறுத்தியதாகபொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், ராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் தான் கருத்து வெளியிட்ட போது, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கான செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விடவும், உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் செலவினங்களைக் குறைப்பதே சிறந்தது என – குழுக் கூட்டத்தில் தான் குறிப்பிட்டதாகவும், அதன்போதே பாதுகாப்புச் செயலாளர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல்களை வெளியிடுவது, நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும், அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறும் சபாநாயகரிடம் சந்திம வீரகொடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என – பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலை எனவும், குரல் பதிவுகளை சரிபார்த்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்