இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

🕔 September 27, 2023

லங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

2019 ஆம் ஆண்டு ரத்மலான கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் 152 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோர் – குற்றவாளிகள் என நீதிபதி நாமல் பல்லலே இன்று தீர்ப்பளித்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதியரசர் பல்லலே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்துக்காக எந்த வருத்தத்தினையும் தெரிவிக்கவில்லை என்றும், மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க மரண தண்டனை அவசியம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

களுத்துறை மேல் நீதிமன்றம்

இதேவேளை 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 08 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

2003ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் குத்தி – நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் களுத்துறை தெற்கில் உள்ள கலில் பிளேஸைச் சேர்ந்த ஒருவர் சந்தேக நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் 43 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட களுத்துறையைச் சேர்ந்தவர்களாவர்.

20 வருட விசாரணையின் பின்னர், களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

கொலை, பாலியல் வன்புணர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரதூரமான குற்றங்களுக்கு இலங்கையில் நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கினாலும், 1976ஆம் ஆண்டிலிருந்து மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்