பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை

🕔 August 28, 2023

பிரான்ஸ் நாட்டு அரச பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான – முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, இந்த விதி அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் அரச பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்கள், அலுவலகங்களில் மத அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என்ற விதிகள் ஏற்கெனவே கடுமையாக அமுலில் உள்ளது. அதுபோன்ற அடையாளங்கள் மத சார்பற்ற சட்டங்களை மீறுவதாக அரசு கருதுகிறது.

அரசு நடத்தும் பாடசாலைகளில் 2004 ஆம் ஆண்டு முதல் தலையை மறைப்பது ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

”கல்வி நிலையங்களில் உள்ள வகுப்பறைக்குள் நுழையும் போது, ​​மாணவர்களின் மதத்தைப் பார்த்து அவர்களை அடையாளம் காண முடியாது” என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் பிரான்சின், தொலைக்காட்சியொன்றில் பேசியபோது கூறினார். மேலும்,”பாடசாலைகளில் மாணவிகள் ஹிஜாபை (முழுநீள தளர்வான ஆடை) இனி அணியக்கூடாது என நான் முடிவு செய்துள்ளேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் பாடசாலைகளில் ஹிஜாப் அணிவது குறித்து – பல மாதங்களாக நடந்த விவாதத்துக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் இந்த வகையான ஆடைகள் அதிகளவில் அணியப்படுகின்றன. இதைத் தடை செய்ய வேண்டும் என வலதுசாரி கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன. அதே நேரத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காகக் இடதுசாரிகள் குரல் கொடுக்கின்றனர். இதனால் அரசியல் சார்ந்த ஒரு பிளவு ஏற்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்