தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி

🕔 August 22, 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன.

சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில், குப்பை மேட்டில் இருந்து அவற்றை தேடியெடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வழமைபோல் குப்பைகளை அகற்றும் பணியில், நேற்று திங்கட்கிழமை (21) காலை நகர சபையின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் மதியம் 1.00 மணி அளவில், மண்டுவில் வட்டாரம் – வேலுப்பிள்ளை வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர், சாவகச்சேரி நகர சபைக்கு வந்து, பழைய துணி மற்றும் குப்பைகளுடன் சேர்த்து தனது நகைகளை தவறுதலாக வீசி விட்டதாக கூறினார்.

மேலும், அந்தக் குப்பைகளை துப்புரவுத் தொழிலாளர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று விட்டார்கள் என்று கூறி, அந்த நகைகளை கண்டெடுத்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த வீட்டார், திருடர்களுக்கு பயந்து தனது நகைகளை ஒரு பையில் போட்டுக் கட்டி, அவற்றை வீட்டில் உள்ள பழைய துணிகளுக்கிடையில் மறைத்து வைத்திருந்ததாக, சாவகச்சேரி நகர சபையின் ஊழியர் ரி. சுரேந்திரன் தெரிவித்தார்.

“தற்போது டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் வீடுகளில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, அந்த வீட்டார் – நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழைய துணிகளையும் மறந்துபோய் குப்பையோடு குப்பையாக வீசியுள்ளனர். பிறகு, நடந்த தவறு நினைவுக்கு வந்த பின்னர், அவற்றை கண்டெடுத்துத் தருமாறு நகர சபைக்கு வந்து உதவி கேட்டார்கள்” என, சுரேந்திரன் கூறினார்.

மீட்டெடுத்த தமிழ்சன்

இதையடுத்து நகர சபை அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க, நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், தாங்கள் சேகரிக்கும் கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேட்டுக்கு சென்று, கழிவுகளுடன் வீசப்பட்ட நகைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பகல் ஒன்றரை மணிக்கு தேடுதல் நடவடிக்கை தொடங்கிய நிலையில், இரண்டரை மணி அளவில் குறித்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன.

மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களில் எஸ். தமிழ்சன் எனும் தொழிலாளி குறித்த நகைகளைக் கண்டெடுத்தார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றினூடாக, சாவகச்சேரி நகர சபையில் துப்புரவுத் தொழிலாளியாக கடமையாற்றி வருகின்றார்.

தமிழ்சன் – நகையை மீட்டெடுத்துக் கொடுத்தவர்

“நாங்கள் சேகரிக்கும் குப்பைகளை தனங்கிளப்பு வீதியிலுள்ள குப்பை மேட்டில் தான் கொட்டுவோம். அந்த இடத்திலிருந்துதான் நகைகளை நான் கண்டெடுத்து, சுரேந்திரனிடம் ஒப்படைந்தேன். அவர் சரிபார்த்து உரியவர்களிடம் நகைகளை ஒப்படைத்தார். இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை” என்றார் தமிழ்சன்.

வளையல், சங்கிலி, மோதிரம் மற்றும் தோடு ஆகிய நகைகள் இதன்போது கண்டெடுக்கப்பட்டன என்றும், இவை அண்ணளவாக 08 பவுன் எடை இருக்கும் எனவும் சுரேந்திரன் கூறினார்.

அதன்படி குறித்த நகைகளின் தற்போதைய சந்தைப் பெறுமதி 13 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானது.

இது விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட சாவகச்சேரி நகர சபையினருக்கும், நகைகளை கண்டெடுத்து நேர்மையுடன் ஒப்படைத்த தொழிலாளிக்கும் சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்