இலங்கை பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி, சீன மொழிகளையும் கற்க வேண்டும்: ஜனாதிபதி

🕔 August 17, 2023

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொட அனுலா வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றப்பட வேண்டும் என்றார்.

“நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு நமது குழந்தைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீனம் மற்றும் ஹிந்தியையும் கற்க வேண்டும்” என கூறினார்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை ‘ஆல்பா’விற்கு (ஜெனரல் ஆல்பா) பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் ‘போட்காஸ்ட்’கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றை நாம் கற்பிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன் டாலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை” என்றார்.

காலநிலை மாற்றம் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் 20 வருடங்களுக்குள் நீர்ப் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார். “நாங்கள் காலநிலை மாற்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். ஐநா தலைவர் கூறியது போல காலநிலை மாற்றத்தை கையாளும் போது உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும்” எனவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்