துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி

பன்வர்லால் ரகுநாத் தோஷி – துறவறம் பூண்ட போது
இந்தியாவைச் சேர்ந்த பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் துறந்து, ஜைன மதத் துறவியானார்.
இத்தியத் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல பிளாஸ்டிக் வியாபாரி பன்வர்லால் ரகுநாத் தோஷி. இவர் – டெல்லியின் `பிளாஸ்டிக் மன்னன்’ என்று அழைக்கப்படுபவர்.
இலங்கை பணத்தில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 1300 கோடி ரூபாவாகும். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு, ஜைன மத பிரச்சாரங்களால் இவர் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் ஜைன மதத் துறவியாக வேண்டுமென்கிற ஆர்வம் இவருக்குள் இருந்து வந்தது. ஆயினும், துறவியாகும் இவருடைய விருப்பத்துக்கு, குடும்பத்தார் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இருந்தபோதும், கடந்த ஆண்டு தனது குடும்பத்தை சமாதானப்படுத்தி துறவறத்துக்கு அனுமதி வாங்கினார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர், ஜைன மதத் துறவியானார்.
பன்வர்லால் ரகுநாத் தோஷி – ஜைன மதத் துறவியாகும் நிகழ்வு – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக, அகமதாபாத்திலுள்ள கல்வி மைதானத்தில் இலங்கை மதிப்பில் சுமார் 210 கோடி ரூபாய் செலவில் மேடை அமைத்தார். கூடாரங்கள், ஒளி அலங்காரம், குடிநீர் வசதி போன்ற பணிகளைச் செய் வதற்காக மட்டும் 20 நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் பாதுகாப்புக்காக மட்டும் 200 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் ஜைன மத அமைப்புகளுக்கு 25 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஆயிரம் துறவிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

பன்வர்லால் ரகுநாத் தோஷியின் மனைவி மற்றும் மகள்