நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம்

🕔 July 3, 2023

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் – நடிப்பதிலிருந்து சில வருடங்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் 65 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்; தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் தனது 68வது படத்தை முடித்த பிறகு – நடிப்பில் இருந்து 3 வருடங்கள் இடைவெளி எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக, நடிப்பிலிருந்து விஜய் தற்காலிகமாக ஓய்வு எடுக்கவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் அரசியலுக்கு வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

விஜய் 3 வருடங்கள் ஓய்வு எடுப்பதாக சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள புதிய சலசலப்பு, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு பிடித்த நடிகர் அரசியலுக்கு வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், ஆனால் அதே நேரத்தில் அவரின் படங்களை இழக்க நேரிடும் என்பதால் அவர்கள் கவலையில் உள்ளனர்.

ஒரு நடிகர் தனது திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுத்து, அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோரும் நடிப்பிலிருந்து ஓய்வெடுத்து – சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையுலகு திரும்பினர்.

இருப்பினும், விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியிடப்படவில்லை. எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி திரையரங்குகளில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம் ஜனவரி 2024 இல் தொடங்கவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்