தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

🕔 June 28, 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் –

ன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்க முயற்சிப்பவர்களே, தன்மீது இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் தன்மீது தொடர்ச்சியாக சிலர் பரப்பிவரும் சோடிக்கப்பட்ட, போலியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக இன்று (28) பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; ”ஹஜ் புனித யாத்திரைக்காகச் செல்லவிருந்த என்னை நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்ததாக எழுதினர். சஊதி மன்னரின் அழைப்பின் பேரில் இம்முறை ஹஜ் கடமையினை நிறைவேற்ற தெரிவுசெய்யப்பட்டேன். ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக விடுமுறை அனுமதியினை ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருந்தேன். எனக்கு சட்டப்படி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நான் நாட்டைவிட்டு தப்பி ஓடப்போவதாக குறிப்பிட்டு, எனக்கெதிராக பெட்டிசன்களை அடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்” என்றார்

போலிப் பிரசாரங்களுக்கு பயப்படப் போவதில்லை

பல்கலைக்கழக தரநிலையில் நாங்கள் பெரிய வீழ்ச்சி எதனையும் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் இருக்கின்ற நிலை போதுமானதில்லை, அதனை முன்னேற்ற வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்திலுள்ள அனைவரின் கூட்டு முயற்சியும் அவசியம். அதேபோல் அவ்வப்போது பல்கலைக்கழகங்களின் தரநிலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கடந்த 05 ஆண்டுகால பல்கலைக்கழகங்களின் உலகத் தரப்படுத்தலைப் பார்த்தால் இதனை புரிந்துகொள்ளலாம்.

சஊதி அரேபிய மன்னரின் விருந்தினராக இம்முறை இலங்கையிலிருந்து நானும் தெரிவுசெய்யப்பட்டேன். எனது பயணத்திற்கு வழங்கப்பட் அனுமதியினை இறுதித் தருவாயில் ரத்துச் செய்துள்ளனர். எனக்கு வழங்கப்பட்ட விடுமுறையினை உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கவே எனது விடுமுறை ரத்துச் செய்யப்பட்டது.

ஹஜ் கடமைக்கான வாய்ப்பினைப் பெறுவது ஒரு முஸ்லிமினுடைய வாழ்க்கையில் பெரும் பாக்கியம். அந்தக் கடமையினை நிறைவேற்றுவதற்காக நான் செசெல்லவிருந்தேன். ஆனால் எனது மார்கக் கடமையினை நிறைவேற்றாமல் தடுப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.

நாட்டை விட்டுத் தப்பியோடு எந்த எண்ணமும் எனக்கில்லை. தவறுகள் எதனையும் செய்யாத நிலையில் – நான் ஏன் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். எந்தவொரு விடயத்திலும் நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் இந்தப் பல்கலைகழகத்தின் பழைய மாணவன். இந்தப் பல்கலைக்கழத்தின் மீது எனக்கு மிகப்பெரிய பற்று இருக்கின்றது.

காழ்ப்புணர்வுள்ள சிலரது போலிப் பிரச்சாரங்களுக்காக – எனது நிறுவனத்தினைக் கைவிடுவதற்கு நான் தயாரில்லை. என்னை நம்பியிருக்கின்ற பல்கலைக்கழக சமூகத்துக்காக முழு முச்சுடன் இயங்குவதில் எனது கவனமுள்ளது.

நீதிமன்றின் வேலையை சமூக ஊடகத்தில் எழுதுவோர் செய்ய முயற்சிக்கின்றனர்

அண்மையில் சாய்ந்தமருதில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலை உபவேந்தரின் சகோதரர் மேற்கொண்டார் என சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அதில் எந்த உண்மையும் இல்லை. ஆயினும் எனது சகோதரர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தினைக் கொண்டு என்னையும் எனது சகோதரரையும் கொலைகாரர்களாக இவர்கள் சித்திரித்தனர். பொலிஸாரினதும் நீதிமன்றத்தினதும் வேலையினை மேற்படி சமூக ஊடகத்தில் எழுதுவோர் செய்ய முயற்சிக்கின்றனர்.

தற்சமயம் எனது சகோதரர் பிணையில் வெளிவந்துள்ளார். சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி எனது சகோதரரையே பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி, சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளேன்.

எனது சகோதரர் விடயத்தில் நான் எந்தவிதமான பாரபட்சங்களும் காட்டவில்லை. குறித்த தாக்குதல் முயற்சியின் உண்மைத் தன்மையினை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

ஒரு குழுவினர் என்னை கொலைகாரனாக சித்திரித்து எனது பிறப்பு, குடும்பத்தினை மானபங்கப்படுத்துகின்றனர். இவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இவர்கள் எனக்கெதிராக சமூக ஊடகங்களில் எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவர்கள் இந்தக் கைங்கரியத்திலேயே ஈடுபட்டனர். மொத்தத்தில் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊடகங்களில் மக்களின் கவனத்தினைப் பெறுவதற்காக சோடிக்கப்பட்டது. காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலரது நடவடிக்கையே இது.

இவர்கள் தொடர்பிலும் இவர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் ஊடகங்களின் கவனம் திரும்ப வேண்டும். இத்தகையோர் தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்கவே என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

பதவிகளைப் பெற முடியாமல் தோல்லி கண்டவர்களே பொய் கதைகளை பரப்புகின்றனர்

இந்தப் பல்லைக்கலைகத்தில் முறையற்ற ரீதியில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கோசமிடுகின்றனர். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல், இட்டுக்கட்டி பொய்யான கதைகளை சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயற்சித்து தோல்வி கட்டவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

எமது பல்கலைக்கழகமும் பல்கலைக்கழக நிருவாகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வினைத்திறனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கடந்த சில வருடங்களாக அமைதியான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளிவருகின்ற போலியான, இட்டுக்கட்டப்பட்ட, மோசடியான கருத்துக்களை நம்பி யாரும் ஏமாந்து விடமாட்டார்கள் என நான் நம்புகிறேன். இந்த உண்மை பலருக்கும் தெரியும். ஆனால் பொது வெளியில் அவற்றினை வெளியிடுவதற்கு அஞ்சுகின்றனர். ஏனெனில் தம்மை பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள சிலர் – சமூக ஊடகங்களில் மானபங்கப்படுத்துவர் என்று பயப்படுகின்றனர்.

உண்மைகள் ஒரு நாள் வெளிவரும். சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மைகளுக்கு அப்பால், ‘அனைத்தும் செய்திகள்’ என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. சமூக மாற்றத்தில் இது எதிர்வினையாற்றக்கூடும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர், பதில் நிதியாளர், பேராசியர் றமீஸ் அப்துல்லா மற்றும் எஹெட் நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்