ஜப்பான் பிரதமரிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி ரணில்

🕔 May 26, 2023

ப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னிப்புக் கோரினார்.

இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (25) ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அவர்களை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜப்பானிய பிரதமரால் சிநேகபூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.

இரு நாடுகளினதும் தலைவர்களது சுமூகமாக கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு டோக்கியோ நகரில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷியை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல துறைகள் வாயிலாக ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்